தஞ்சையில் டி.டி.வி.தினகரன் உருவபொம்மை எரிப்பு


தஞ்சையில் டி.டி.வி.தினகரன் உருவபொம்மை எரிப்பு
x
தினத்தந்தி 22 Aug 2017 11:00 PM GMT (Updated: 22 Aug 2017 10:01 PM GMT)

தஞ்சையில் டி.டி.வி.தினகரன் உருவபொம்மையை வைத்திலிங்கம் எம்.பி. ஆதரவாளர்கள் எரித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அம்மா அணியும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புரட்சி தலைவி அம்மா அணியும் உருவானது. இந்த 2 அணிகளும் இணைந்த பின்னர் அ.தி.மு.க.(அம்மா) பொதுச் செயலாளர் சசிகலாவை அப்பொறுப்பில் இருந்து நீக்க பொதுக்குழுவை கூட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைப்பு செயலாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. அறிவித்தார். இதனால் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் கட்சியில் இருந்து ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. நீக்கப்படுவதாக அ.தி.மு.க.(அம்மா) துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று அறிவித்தார்.

இதனால் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வட்ட செயலாளர்கள் ராஜா, அய்யாவு, பாஸ்கர், செந்தில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி உள்பட 20-க்கும் மேற்பட்டோர் தஞ்சை ரெயிலடியில் பட்டாசு வெடிப்பதற்காக ஒன்று திரண்டனர். அதேநேரத்தில் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. கட்சியை விட்டு நீக்கப்பட்ட செய்தியை அறிந்து வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்தனர். பின்னர் அவர்கள் டி.டி.வி.தினகரனை கண்டித்து அவரது உருவபொம்மையை எரிப்பதற்காக தஞ்சை ரெயிலடியில் ஒன்று திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. உடனே நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். திடீரென வைத்திலிங்கம் ஆதரவாளர்கள், டி.டி.வி.தினகரன் உருவபொம்மையை தீ வைத்து எரிக்க முயன்றனர். இதை பார்த்த தினகரன் ஆதரவாளர்கள் விரைந்து வந்து உருவபொம்மையை பறிக்க முயன்றனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவானது. ஒருவரையொருவர் கையால் தாக்கி கொண்டனர். வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் சிலர் உருட்டு கட்டைகளை எடுத்து வந்து தினகரன் ஆதரவாளர்களை தாக்க முயன்றனர். இதை பார்த்த போலீசார் அந்த உருட்டு கட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இரு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்து சென்று மீண்டும் மோதல் ஏற்படாதவாறு இடையில் சங்கிலியை போல் போலீசார் கைகளை கோர்த்து கொண்டு நின்றனர். இந்த நேரத்தில், ஏற்கனவே கட்சியில் இல்லாத தினகரனுக்கு யாரையும் நீக்க அதிகாரம் இல்லை என்று கூறி தினகரன் உருவபொம்மையை வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் தீ வைத்து எரித்தனர்.

இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி, முன்னாள் தொகுதி செயலாளர் துரை.திருஞானம், ஒன்றிய செயலாளர் துரை.வீரணன், பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி அமுதாராணி ரவிச்சந்திரன், முன்னாள் நகர செயலாளர் பண்டரிநாதன், வட்ட செயலாளர் தாஸ், முன்னாள் தொகுதி இணைச் செயலாளர் பாலைரவி உள்பட 35-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தினகரனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது வைத்திலிங்கத்திற்கு எதிராக தினகரன் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இரு தரப்பினரையும் போலீசார் கலைந்து செல்ல வலியுறுத்தினர். இதையடுத்து வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால் தினகரன் ஆதரவாளர்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். அவர்களை அங்கிருந்து கலைந்து செல்ல வலி யுறுத்தியபோது திடீரென வட்ட செயலாளர் ராஜாவுக்கும், போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேலுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார். சிறிதுநேரத்தில் தினகரன் ஆதரவாளர்கள், வைத்திலிங்கம் படத்தை எரிப்பதற்காக வந்தனர். இதை பார்த்த போலீசார் விரைந்து வந்து வைத்திலிங்கம் படத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள், கட்சியில் இருந்து வைத்திலிங்கம் எம்.பி. நீக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை வழங்கினர். 

Related Tags :
Next Story