‘ஐ மிஸ் யூ’ குறுஞ்செய்தியால் காதலனின் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்


‘ஐ மிஸ் யூ’ குறுஞ்செய்தியால் காதலனின் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்
x
தினத்தந்தி 23 Sep 2017 10:30 PM GMT (Updated: 23 Sep 2017 10:11 PM GMT)

பெங்களூரு அருகே 11 ஆண்டு காதலை முறித்து கொண்டு வேறொரு பெண்ணை கரம்பிடிக்க முயன்றபோது ‘ஐ மிஸ் யூ’ எனும் குறுஞ்செய்தியால் காதலனின் திருமணத்தை இளம்பெண் நிறுத்தினார்.

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களாவில் வசித்து வருபவர் அர்ஜூன் (வயது 29). இவரும், மைசூருவை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் 11 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர். சமீபத்தில் அர்ஜூனுக்கும், வேறொரு இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதனால், சமீப காலமாக அர்ஜூன், தனது காதலியுடன் சரியாக பேசவில்லை. அத்துடன் தனக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருப்பது குறித்தும் அவர் தனது காதலிக்கு தெரிவிக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் அர்ஜூனின் திருமணம் நெலமங்களாவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற இருந்தது. திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன.

அப்போதும், தனது காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருக்கும் வி‌ஷயம் மைசூருவை சேர்ந்த அர்ஜூனின் காதலிக்கு தெரியவில்லை. இதற்கிடையே, திருமணத்துக்கு முந்தைய நாள் இரவில் அர்ஜூன் தனது செல்போனில் இருந்து காதலியின் செல்போனுக்கு குறுஞ்செய்தி செய்தார். அதில், ‘ஐ மிஸ் யூ‘ என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இதை பார்த்த அவருடைய காதலி ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற இருப்பதாக கருதினார். உடனடியாக அவர் மைசூருவில் இருந்து நெலமங்களாவுக்கு வந்தார். அப்போது, அவர் அர்ஜூனின் நண்பர்களை சந்தித்தார். அவர்களிடம் பேசியபோது தான் அர்ஜூனுக்கும், வேறொரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருப்பது அவருக்கு தெரியவந்தது. இதனால், 11 ஆண்டு காதலை முறித்து கொண்டு அர்ஜூன் வேறொரு பெண்ணை கரம் பிடிக்க முயற்சிப்பதை நினைத்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக திருமண மண்டபத்துக்கு சென்ற அர்ஜூனின் காதலி சம்பவம் குறித்து அங்கு உள்ளவர்களிடம் தெரிவித்து திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று கூறினார். அதைக்கேட்டு அர்ஜூன் மற்றும் திருமண பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நெலமங்களா போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருமண மண்டபத்துக்கு வந்த போலீசார் அர்ஜூன், மணப்பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அர்ஜூனின் காதலியை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி திருமணத்தை நிறுத்தினர். மேலும், அர்ஜூன் மீது அவருடைய காதலி நெலமங்களா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நெலமங்களா நேற்று முன்தினம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story