கேட் தேர்வின் அடிப்படையில் வேலை


கேட் தேர்வின் அடிப்படையில் வேலை
x
தினத்தந்தி 25 Sep 2017 8:30 AM GMT (Updated: 25 Sep 2017 7:01 AM GMT)

‘கேட்’ தேர்வின் அடிப்படையில் பல்வேறு முன்னணி மத்திய அரசு நிறுவனங்களில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

மத்திய தொழில்நுட்ப - அறிவியல் கல்வி மையங்களில் முதுநிலை படிப்புகளில் தகுதியானவர்களை சேர்க்க ‘கேட்’ தேர்வு (GATE) எனும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது 2018-ம் ஆண்டுக்கான ‘கேட்’ தேர்வு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களை பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் தங்கள் நிறுவன பணிகளிலும் பணியமர்த்திக் கொள்கிறது.

கேட் தேர்வு அறிவிப்பு, வெளியானதும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் நிறுவன பணியிட அறிவிப்பை வெளியிட்ட வண்ணம் உள்ளன. கடந்த வாரம் சில நிறுவனங்களின் பணி அறிவிப்பை பார்த்தோம். இந்த வாரம் மேலும் சில நிறுவனங்கள் பணி அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அது பற்றி பார்ப்போம்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், கேட் தேர்வுக்கு விண்ணப்பித்த பதிவு எண்ணுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இந்தத் தேர்வுக்கு வருகிற 5-10-2017-ந் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க www.gate.iitg.ac.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம். ‘கேட்’ தேர்வு முடிவு 17-3-2018 அன்று வெளியாகும்.
இனி மத்திய அரசு நிறுவனங்களில் கேட் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படும் பணியிட விவரங்களை பார்ப்போம்...

அணுசக்தி நிறுவனம் :

அணுசக்தி கழக நிறுவனமான என்.பி.சி.ஐ.எல். நிறுவனத்திலும் கேட் -2018 தேர்வின் அடிப்படையில், என்ஜினீயரிங் டிரெயினி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள், கேட் பதிவு எண்ணுடன் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் 2018 பிப்ரவரியில் இணையதளத்தில் செயல்பாட்டிற்கு வரும். விண்ணப்பிக்க கடைசி நாள் 31-3-2018. இதுபற்றிய விவரங்களை www.npcil.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

மின் நிறுவனம் :

மத்திய அரசு, உத்தர பிரதேச அரசுடன் இணைந்து செயல்படுத்தும் ஒரு துணை நிறுவனம் டி.எச்.டி.சி. இந்தியா லிமிடெட். மினி ரத்னா அந்தஸ்து பெற்ற மின்சார நிறுவனமான இதில் தற்போது கேட் தேர்வின் அடிப்படையில் என்ஜினீயர் டிரெயினி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. கேட் 2018 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அந்த பதிவு எண்ணுடன் டி.எச்.டி.சி. நிறுவனத்தின் விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்கலாம். இதற்கான இணைய விண்ணப்பம் 5-1-2018-ந் தேதி செயல்பாட்டிற்கு வரும். 31-1-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.thdc.co.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Next Story