சென்னையில் தீபாவளி பட்டாசு விபத்தில் 58 பேர் காயம் கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகம்


சென்னையில் தீபாவளி பட்டாசு விபத்தில் 58 பேர் காயம் கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகம்
x
தினத்தந்தி 20 Oct 2017 2:00 AM GMT (Updated: 19 Oct 2017 7:58 PM GMT)

சென்னையில் தீபாவளி பட்டாசு விபத்தில் 58 பேர் காயம் அடைந்தனர். இது கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகம் ஆகும்.

சென்னை,

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு தீக்காய வார்டுகளை ஏற்படுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகிறது. தமிழகத்திலேயே தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பெயர் பெற்ற சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு தீக்காய வார்டு சில நாட்களுக்கு முன்பே ஏற்படுத்தப்பட்டது. இதேபோல ராயப்பேட்டை, ஸ்டான்லி, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிகளிலும் தேவையான ஏற்பாடுகள் தயார் நிலையில் செய்யப்பட்டன.

தீபாவளி அன்று பட்டாசு வெடித்தபோது காயம் அடைந்த 3 சிறுவர்கள் உள்பட 10 பேர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி சிறப்பு தீக்காய வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர 19 பேர் புறநோயாளிகளாக தீக்காயத்துக்கு சிகிச்சை பெற்று சென்றனர்.

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 2 பேரும், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் 14 பேரும், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 9 பேரும் தீக்காயத்துக்கான முதலுதவி சிகிச்சை பெற்றனர். மேலும் சென்னை அரசு கண் ஆஸ்பத்திரியில் 4 சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் 7 சிறுவர்கள் உள்பட 58 பேர் தீக்காயம் அடைந்துள்ளனர்.

சென்னையில் கடந்தாண்டு தீபாவளி பட்டாசு விபத்தில் 25 பேர் சிகிச்சை பெற்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தீ விபத்தில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது.

எனினும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தீபாவளி பட்டாசுகளால் தீ விபத்துகள் பெறும் அளவு குறைந்துள்ளன. சென்னையில் நேற்று முன்தினம் 46 தீ விபத்துகள் மட்டுமே நடந்தன. இவை அனைத்தும் சிறிய அளவிலான தீ விபத்துகள் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Next Story