கோத்தகிரி அருகே அரசு பள்ளியின் மேற்கூரையில் உடைந்த ஓடுகளை அகற்றிய மாணவர்கள்


கோத்தகிரி அருகே அரசு பள்ளியின் மேற்கூரையில் உடைந்த ஓடுகளை அகற்றிய மாணவர்கள்
x
தினத்தந்தி 24 Oct 2017 8:59 AM GMT (Updated: 24 Oct 2017 8:59 AM GMT)

கோத்தகிரி அருகே அரசு பள்ளியின் மேற் கூரையில் உடைந்த ஓடுகளை மாணவர்கள் அகற்றியதற்கு பெற்றோர், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள பெட்டட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் பெட்டட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த பள்ளியின் மேற்கூரைகளின் ஓடுகள் உடைந்து காணப்படுகின்றன. இதனால் வகுப்பறைக்குள் மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகுவதால் மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமமடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை பள்ளி மாணவர்கள் சிலர், மேற்கூரையின் மீது அமர்ந்து உடைந்த ஓடுகளை அகற்றிக்கொண்டு இருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களிடம் இது குறித்து கேட்டதுடன், கண்டனம் தெரிவித்தனர். அதற்கு அவர்கள் உடைந்த ஓடுகளை அகற்ற கூறியதாக தெரிவித்துள்ளனர். பின்னர் மாணவர்கள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள், பெற்றோர்கள் கூறியதாவது:-

பழுதடைந்த ஓடுகளை அகற்றுவது அல்லது அதனை மாற்றுவது என்பது அத்தியாவசிய தேவையாக இருப்பினும் முறையான பணியாளர்களை கொண்டு பராமரிப்பு பணி செய்ய வேண்டும். பாதுகாப்பற்ற வகையில் பள்ளி மாணவர்களை வைத்து பராமரிப்பு பணி மேற்கொண்டது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து தக்க நடவடிக்கை எடுத்து பள்ளிக் கட்டிடத்தின் பழுதடைந்த மேற்கூரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை மும்தாஜ் கூறியதாவது:-

பெட்டட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 56 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். மற்ற வகுப்பறைகள் கான்கிரீட் கட்டிடத்தில் இயங்கி வந்தாலும், 8-ம் வகுப்பு மட்டும் ஓடுகளால் ஆன வகுப்பறையில் செயல்பட்டு வருகிறது. குரங்குகளின் தொல்லையால் ஓடுகள் உடைந்து உள்ளன. இந்த ஓடுகள் கீழே விழுந்து மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, ஆசிரியர்கள் மேற்பார்வையில், மாணவர்கள் மேற்கூரையில் ஏற்றி விடப்பட்டு, உடைந்த ஓடுகளை அகற்ற கூறினோம். தொடர்ந்து மேற்கூரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் சந்திரசேகர் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Next Story