டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி: திருவாரூர் பகுதிகளில் கலெக்டர் ஆய்வு


டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி: திருவாரூர் பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 29 Oct 2017 10:45 PM GMT (Updated: 29 Oct 2017 8:04 PM GMT)

திருவாரூர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியையொட்டி கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுத்திட மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியையொட்டி திருவாரூர் அருகே காட்டூர், கொட்டாரக்குடி, பாரதிமூலங்குடி ஆகிய பகுதிகளை கலெக்டர் நிர்மல்ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பொதுமக்களிடம் டெங்கு கொசு உற்பத்தியாவதால் ஏற்படும் காய்ச்சல் குறித்து விளக்கி கூறினார். தேவையற்ற டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்திட வேண்டும். மேலும் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ள பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்கள் தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், பயனற்ற டயர்களை அப்புறப்படுத்திட வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று ரத்த பரிசோதனையும், சிகிச்சையும் பெற்று கொள்ள வேண்டும். பொதுமக்கள் மருத்துவரின் ஆலோசனை பெறாமல் மருந்துகடைகளிலோ, போலி மருத்துவர்களிடமோ சிகிச்சை பெறுவதை தவிர்த்திட வேண்டும்.

பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் டெங்கு காய்ச்சலை எளிதில் தடுக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். 

Related Tags :
Next Story