சென்னையில் கடும் பனி மூட்டத்தால் விமான சேவை பாதிப்பு


சென்னையில் கடும் பனி மூட்டத்தால் விமான சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 12 Dec 2017 11:15 PM GMT (Updated: 12 Dec 2017 5:53 PM GMT)

சென்னையில் கடும் பனி மூட்டத்தால் விமான சேவை பாதிப்பு முதல்–அமைச்சரின் விமானம் தாமதம்.

ஆலந்தூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் முடிவதற்குள் குளிர்காலம் தொடங்கி விட்டது. மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் குளிர்வாட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், கடலூர், விழுப்புரம் ஆகியவற்றில் அதிகாலை நேரத்தில் பனி மூட்டமும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் இருந்தே அடர்ந்த வெண் புகை சூழ்ந்தது போல் கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இந்த நிலை காலை 9 மணிவரை நீடித்தது.

இதன் காரணமாக சுமார் 20 மீட்டர் தொலைவில், எதிரே உள்ளவற்றை கூட பார்க்க முடியாத சிரமமான நிலை காணப்பட்டது. இதனால் வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்த பஸ், லாரி, கார், வேன் உள்ளிட்ட இதர வாகனங்களும், ரெயில்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவான வேகத்தில் இயக்கப்பட்டன.

பனி மூட்டத்தால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. மும்பை, பெங்களூரு, போர்ட் லூயிஸ் (மொரீசியஸ்) ஆகிய நகரங்களில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வரவேண்டிய விமானங்கள் கடும் பனிபொழிவினால் தரையிறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன.

அதேபோல் சிங்கப்பூர் மற்றும் ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானங்கள் ஐதராபாத்திற்கும், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த விமானம் திருச்சிக்கும் திருப்பி விடப்பட்டது.

மேலும் கோலாலம்பூர், சார்ஜா, திருவனந்தபுரம், கொழும்பு, புனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வந்த 15–க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்குவதிலும், 25–க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்பட்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டது.

சென்னையில் வானிலை சீரானதும் பிற பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள் சென்னை விமானம் நிலையங்களுக்கு வந்து சேர்ந்தன. இதனால் பயணிகளும், அவர்களை வரவேற்க வந்திருந்த உறவினர்களும் அவதிக்கு உள்ளானார்கள்.

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் ஜெயகுமாரும் நேற்று காலை 10.15 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி செல்வதாக இருந்தது. பனிமூட்டம் காரணமாக அவர்களது விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.


Next Story