பஸ்களில் கட்டண உயர்வு: போதிய பணம் இல்லாத பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்


பஸ்களில் கட்டண உயர்வு: போதிய பணம் இல்லாத பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்
x
தினத்தந்தி 20 Jan 2018 10:45 PM GMT (Updated: 20 Jan 2018 7:28 PM GMT)

கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் போதிய பணம் இல்லாத பயணிகள், நடுவழியில் இறக்கி விடப்பட்டனர். இருமடங்காக கட்டணம் உயர்த்தப்பட்ட தாழ்தள சொகுசு பஸ்களை சாதாரண பஸ்களாக இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை,

பஸ் கட்டண உயர்வு குறித்து கோவை பஸ் நிலையங்களில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் கூறியதாவது:-

சிவக்குமார்(ரத்தினபுரி):- பஸ் கட்டண உயர்வு சாதாரண மக்களை மிகவும் பாதித்துள்ளது. அரசு பஸ்களில் குறைந்த கட்டணம் என்பதால் முன்பு பயணம் செய்தோம். இப்போது அரசு பஸ்களில் தாறுமாறாக கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். நேற்று 6 ரூபாய் கட்டணத் தில் எனது ஊருக்கு பயணம் செய்தேன். இப்போது 15 ரூபாய் கொடுக்க வேண்டியது உள்ளது. இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

உஷா(அன்னூர்):- அன்னூரில் இருந்து கோவைக்கு வர இரண்டு மடங்கு கட்டணம் உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம். குறிப்பாக தாழ்தள சொகுசு டவுன் பஸ்களில் கட்டணம் மிகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. சொகுசு பஸ் என்றால், பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும். ஆனால் கதவுகள் உடைந்து, இருக்கைகள் சேதம் அடைந்து உள்ளவற்றை தாழ்தள சொகுசு பஸ் என்று கூறுகிறார்கள். சொகுசு பஸ் என்று பெயர் மட்டும் வைத்ததால் கூடுதல் கட்டணம் கொடுக்க வேண்டியது உள்ளது. எனவே தாழ்தள சொகுசு டவுன் பஸ்களை சாதாரண பஸ்கள் என்ற பெயரிலேயே இயக்கி, அதற்குரிய கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும்.

ஜீனத் (மதுக்கரை):- திடீரென்று பஸ் கட்டணத்தை உயர்த்தியதால் பாதிக்கப்பட்டு உள்ளோம். வழக்கமான செல்வதால் பஸ் டிக்கெட்டுக்குரிய கட்டணத்தை மட்டும் கொண்டு வந்தேன். முன்அறிவிப்பு இன்றி இருமடங்கு கட்டணம் கேட்டதால் பஸ்சில் இருந்து இறங்கி விட்டேன். முன்பு பஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள். இப்போது கட்டண உயர்வை குறைக்க கோரி போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டு உள்ளோம். எனவே பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். அரசு பஸ்களை முறையாக பராமரிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.

லட்சுமி (தொண்டாமுத்தூர்):- தொண்டாமுத்தூரில் இருந்து 10 ரூபாயில் காந்திபுரம் வருவேன். இப்போது பஸ் டிக்கெட் 20 ரூபாய் ஆகியுள்ளது. இதனால் தினசரி பஸ்களில் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், வெளியூர்களில் இருந்து இங்கு வந்து வேலை செய்பவர்கள் சம்பள பணத்தில் போக்குவரத்துக்கு கூடுதலாக செலவிடும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பஸ் கட்டண உயர்வு குறித்த தகவல் தெரியாமல், வழக்கம் போல் பயணம் செய்ய வந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் வழக்கமாக பஸ்சிற்கு ஆகும் டிக்கெட் கட்டணத்துடன் பஸ்சில் ஏறினர். அவர்கள் வழக்கமாக கட்டணத்தை கொடுத்து டிக்கெட் கேட்டனர்.

அவர்களிடம் கண்டக்டர், உயர்த்தப்பட்ட கட்டணத்தை தருமாறு கேட்டுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் வழக்கமான கட்டணத்துக்குரிய பணத்தை மட்டுமே எடுத்து வந்து இருப்பதாக கூறினர். போதிய பணம் இல்லாததால் அந்த பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர். இதனால் அவர்கள், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டது.

தாழ்தள சொகுசு டவுன் பஸ்களில் இருமடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுஉள்ளது. இதனால் அந்த பஸ்களில் பெரும்பாலான பயணிகள் ஏறுவது இல்லை. இதன் காரணமாக தாழ்தள சொகுசு பஸ்கள் ஆட்கள் இன்றி செல்லும் நிலை உள்ளது.

மேலும் பயணிகள் சாதாரண பஸ்கள் வரும் வரை காத்திருந்து அதில் ஏறி பயணம் செய்கின்றனர். இதனால் சாதாரண பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பெண்கள், முதியவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

கட்டணம் உயர்த்தப்பட்டது தெரியாமல் பஸ்சில் ஏறிய பயணிகள் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கண்டக்டர்கள் தவித்தனர். இது போல் கட்டண உயர்வு குறித்து கேட்டு பல இடங்களில் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். 

Next Story