உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 21 Jan 2018 11:30 AM GMT (Updated: 21 Jan 2018 8:45 AM GMT)

அவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். நடுத்தர வருவாய் குடும்பத்தை சேர்ந்தவர். வசதிபடைத்த குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கும்- அவருக்கும் திருமணம் நடந்தது.

 பெண் அழகான தோற்றம் கொண்டவள். ‘எங்கள் மகள் எல்லோரிடமும் கலகலப்பாக பேசக்கூடியவள். எளிதாக அனைவரிடமும் அறிமுகமாகிக் கொள்வாள். அவள் இருக்கும் இடத்தில் பேச்சு இருந்து கொண்டே இருக்கும்..’ என்று அவளது பெற்றோர் திருமணத் திற்கு முன்பு சொன்னது மாப்பிள்ளையின் கவனத்தில் அவ்வளவாக பதியவில்லை.

திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆன நிலையில் அந்த புதுமாப்பிள்ளை, ‘நான் முன்பின் யோசிக்காமல் அவளை திருமணம் செய்து விட்டேன். இப்போது அந்த குடும்பத்தின் பிடியில் இருந்து எப்படி விலகுவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன். நான் அவளிடமிருந்து முறைப்படி பிரிவதற்கு வழி சொல்லுங்கள்’ என்று தனது குடும்ப நண்பரான வக்கீல் ஒருவரிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அப்படி, அவரது மனைவியிடம் என்ன குறை இருக்கிறது?

அவரே சொல்கிறார்:

‘என் மனைவி அறிமுகமற்ற ஆண் களிடம்கூட எளிதாக ஒட்டி உறவாடி பேசுகிறாள். தானாகவே முன்வந்து அவர்களிடம் தனது செல்போன் நம்பரை கொடுத்து எப்போது வேண்டுமானாலும் பேசுங்கள் என்று கூறுகிறாள். அதனால் எப்போதும் பேச்சு.. சாட்டிங்.. என்று பொழுதுபோக்குகிறாள். அதை பற்றி கேட்டால், ‘என்ன நீங்க சுத்த பட்டிக்காடா இருக்கீங்க.. இதெல்லாம் வெறும் பிரெண்ட்ஷிப் மட்டும்தான். இதை எல்லாம் நீங்க கண்டுக்க கூடாது’ என்று சொல்கிறாள். இதற்கிடையில் அவளோடு முன்பு நட்பில் இருந்த இளைஞன் ஒருவன் என் மனைவியின் சில போட்டோக்களை எனக்கு அனுப்பித்தந்தான். அவை எல்லாம் ஒரு கணவனால் காண சகிக்காதவை. அதை சுட்டிக்காட்டி அவளிடம் கேட்டபோது, ‘ஏதோ ஒரு தடவை அப்படி நடந்திடுச்சு. இனி இப்படி எல்லாம் நடக்காது’ என்று கூலாக சொல்கிறாள்.

அவளுக்கு தோழிகளே கிடையாது. புதிய புதிய ஆண்களோடு மட்டும் நட்பு பாராட்டிக்கொண்டே இருக்கிறாள். ஆண்களோடு பேசும்போது அவள் முகம் மகிழ்ச்சியால் மின்னும். எத்தனை மணி நேரமானாலும் பேசிக்கொண்டே இருப்பாள். அந்த ஆர்வத்தை என்னிடம் படுக்கை அறையில் காட்டுவதில்லை. படுக்கையை தவிர்க்கிறாள். என்னோடு பேசுவதிலும் அவளுக்கு விருப்பம் இல்லை.

சமீபத்தில் ஒரு நாள் எல்லைமீறி ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது, நான் ஆத்திரத்தில் அவளது போனை பறித்து எறிந்துவிட்டு, அவளை அடித்துவிட்டேன். உடனே வீட்டைவிட்டு வெளியேறியவள் எங்கு சென்றாள் என்றே தெரியவில்லை. நான் அவளது பெற்றோருக்கு தகவல் கொடுத்தேன். அவர்கள் தேடினார்கள். ஒரு இரவு முழுக்க அவளை காணவில்லை. மறுநாள் வந்தாள். அதன் பின்பாவது திருந்தி வாழ்வாள் என்று நினைத்தேன். இப்போதும் பழைய படி செல்போனில் ஆண்களுடன்தான் அரட்டையடித்துக்கொண்டிருக்கிறாள். தட்டிக்கேட்டால் வலிப்பு வந்தவள் போல கீழே விழுந்து உடலை வளைத்து ஏதேதோ செய்கிறாள். என்னை மிரட்டவே அப்படி நடந்துகொள்கிறாள். ஆண்களுடனான தொடர்பை விட்டுவிடும்படி சொன்னால் தற்கொலை செய்யப்போவதாகவும் மிரட்டுகிறாள். அவளது பெற்றோரிடம், அவளை பற்றி புகார் செய்யும் ஒவ்வொரு முறையும் அவர்கள் அவளது நடத்தை பற்றி பேசுவதில்லை. அவளிடம் தட்டிக்கேட்பதும் இல்லை. மாறாக, எனக்கு புதிய பங்களா ஒன்று வாங்கித்தருவதாகவும், விலை உயர்ந்த சொகுசு கார் வாங்கித்தருவதாகவும் கூறி என் வாயை அடைத்துவிடுகிறார்கள். அவளது குணாதிசயம் தெரிந்தே எனக்கு திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள். நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன். எனக்கு அவளோடு வாழ பிடிக்கவில்லை..’ என்ற புலம்பலோடு கண்ணீர் விடுகிறார்.

அவருக்கு வக்கீல் என்ன ஆலோசனை சொன்னார் என்ற விஷயத்திற்குள் நாம் நுழைய விரும்பவில்லை. இப்படி எல்லாம் வெளி ஆண்களிடம் நட்பை உருவாக்கி, கணவரை கண்ணீர்விட வைக்கும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதை உங்க காதிலேயும் போட்டுவைக்க விரும்புகிறோம்.. அவ்வளவுதான்..!

- உஷாரு வரும்.

Next Story