உடல் தேறிய 400 கிராம் குழந்தை


உடல் தேறிய 400 கிராம் குழந்தை
x
தினத்தந்தி 21 Jan 2018 10:42 AM GMT (Updated: 21 Jan 2018 10:42 AM GMT)

400 கிராம் எடையுடன் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை 6 மாத கால மருத்துவ போராட்டத்திற்கு பிறகு உடல்தேறியிருக்கிறது. இதுபோன்ற சிக்கலான பிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றுவது மருத்துவ உலகில் அபூர்வமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சீதா என்ற பெண்ணுக்கு திருமணமாகி 35 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறது. கடந்த ஆண்டு கருத்தரித்த அவர் திடீரென உயர் ரத்த அழுத்த பாதிப்புக்குள்ளாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது குழந்தைக்கு ரத்தம் செல்லவில்லை என்பது கண்டறியப்பட்டது.

குழந்தையை காப்பாற்றுவதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி சிசேரியன் செய்தனர். அப்போது குழந்தையின் எடை 400 கிராம் மட்டுமே இருந்தது. அதன் கால்பகுதி விரல் அளவுக்குத்தான் இருந்தது. நுரையீரல் சரியாக வளர்ச்சி அடையாததால் அது சுவாசிப்பதிலும் பிரச்சினை உருவானது. அதனால் விசேஷ இன்குபெட்டர் கருவியில் வைத்து குழந்தையை காப்பாற்றுவதற்காக போராடினார்கள்.

குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ரத்தம் மூலம் செலுத்தப்பட்டது. டாக்டர்களின் தீவிர கண்காணிப்பின் பயனாக ஆறு மாதத்தில் குழந்தை முழு வளர்ச்சி அடைந்திருக்கிறது. தற்போது குழந்தை 2 கிலோ 400 கிராம் எடை கொண்டிருக்கிறது. மொகாலியில் 2012-ம் ஆண்டு ரஜ்னி என்ற குழந்தை 450 கிராம் எடையுடன் பிறந்தது. அதன் பிறகு இப்போது 400 கிராம் எடையுடன் பிறந்த இக்குழந்தை காப்பாற்றப்பட்டிருக்கிறது.

குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஜாங்கிட் கூறுகையில், ‘‘தெற்கு ஆசியாவிலேயே குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை இது. இயல்பு நிலைக்கு குழந்தை திரும்பியிருப்பது மகிழ்ச்சியான விஷயம். குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது தான் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது’’ என்றார்.

Next Story