மனம் கவர்ந்த எலக்ட்ரானிக்ஸ் சந்தை


மனம் கவர்ந்த எலக்ட்ரானிக்ஸ் சந்தை
x
தினத்தந்தி 22 Jan 2018 9:56 AM GMT (Updated: 22 Jan 2018 9:56 AM GMT)

எலக்ட்ரானிக் பொருட்கள் சந்தை மக்களின் மனதை ஈர்ப்பதில் வியப்பில்லை. அதிலும் புதுமையாக அறிமுகமாகும் பொருட்களின் சங்கமம் என்றால் மக்களின் பேராதரவிற்கு அளவில்லை.

லக அளவில் புதுமையாக அறிமுகமாகும் எலக்ட்ரானிக் பொருட்களின் சந்தையான சி.இ.எஸ்.2018 அமெரிக்காவில் நடந்து வருகிறது. கண்காட்சியில், போஸ்டர்போல மடித்துச் சுருட்டும் எல்.இ.டி. டி.வி., முகம் பார்க்கும்போதே அழகுக் குறிப்புகளையும், அன்றாட பணிப் பட்டியலையும் தரும் ஸ்மார்ட் கண்ணாடி, தானியங்கி எலக்ட்ரிக் வாகனங்கள், உலகின் சிறிய மடிக்கணினி என எண்ணற்ற கருவிகள் மக்களின் மனங்களை கவர்ந்து இழுக்கிறது. அந்தக் கண்காட்சியின் சுருக்கமான கண்ணோட்டம்...

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாணத்தில் நடக்கிறது சி.இ.எஸ்.2018 கண்காட்சி. நேரில் காண முடியாதவர்கள் இணையதளங்களின் வழியே கண்காட்சியை ரசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எனவே கண்காட்சியை இணையம் வழியே கண்டுகளித்து பிடித்தமானவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ‘டிரெண்டி’ ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் எலக்ட்ரானிக்ஸ் பிரியர்கள்.

கடந்த ஆண்டு அமேசான் நிறுவனம் ஸ்மார்ட் வீடுகளை உருவாக்கும் புதுமையான எலக்ட்ரானிக் கருவிகளை தயாரிக்கும் ‘அலெக்சா’ பிரிவைத் தொடங்கி விற்பனையை ஆரம்பித்தது. செயற்கை அறிவு நுட்பத்துடன் கூடிய அந்தக் கருவிகள் நல்ல வரவேற்பைப் பெற்றதால், இந்த ஆண்டு அதற்கு போட்டியாக கூகுள் அசிஸ்டன்ட் களத்தில் குதித்தது. எல்.ஜி., சாம்சங் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்களும்கூட கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட் வீடுகளுக்கான சாதனங்களை தயாரித்து விற்கின்றன. அந்த வகையில் ஸ்மார்ட் டி.வி., ஸ்மார்ட் வாஷிங்மெஷின் உள்ளிட்ட ஏராளமான வீட்டுவசதிச் சாமான்கள் ஸ்மார்ட் வடிவம் பெற்று விற்பனைக்கு வந்திருக்கின்றன. ‘பிக்ஸ்பை அசிஸ்டன்ட்’ நிறுவனம் ஸ்மார்ட் கருவிகளை கிளவுட் தொழில்நுட்பத்தில் இணைத்து செயல்படுத்தும் சேவையை அறிமுகம் செய்து வருகிறது.

இந்த அதிக போட்டியும், பொதுமக்களின் ஆதரவும், 2020-ம் ஆண்டிற்குள் பெரும்பாலான வீட்டு உபயோகப் பொருட்களை செயற்கை அறிவு நுட்பத்திற்கு மாற்றிவிடும் என்ற நம்பிக்கையை மலரச் செய்துள்ளது. அந்த வகையில் இந்த கண்காட்சியில் ஸ்மார்ட் விளக்குகள், கண்ணாடி, ஸ்மார்ட் கழிவறை, ஸ்மார்ட் குழாய் டேப்கள் ஆகிய பொருட்கள் நிறைய அறிமுகமாகி இருந்தன.

சாதாரண தொலைக்காட்சிகள் மெல்ல மறைந்து, நவீன தொழில்நுட்ப டி.வி.களின் மோகம் மக்களிடம் பெருகி உள்ளது. இணையதளத்தில் வேண்டியதை ரசிக்கும் மக்கள் பெருகிவிட்டதாலும், காட்சிகளை பிரமாண்டமாக பார்க்கும் ஆவல் அதிகரித்துவிட்டதாலும் டி.வி.கள் பெரிய திரையுடன், அதிக வசதிகளை உள்ளடக்கியதாக அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. எல்.ஜி., சாம்சங் மற்றும் பல புதிய நிறுவனங்கள் பல்வேறு அளவுகளில், வெவ்வேறு சிறப்புகளுடன் டி.வி.களை அறிமுகம் செய்திருந்தன. எல்.ஜி. அறிமுகம் செய்த தடிமன் குறைந்த சுருட்டி மடிக்கும் ‘ரோலபிள் ஓ.எல்.இ.டி. டி.வி.’ பலரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இதை எளிதாக எங்கும் எடுத்துச் சென்று சுவரில் ஒட்டி, நிகழ்ச்சிகளை ரசிக்கலாம். இதேபோல வீடியோ காட்சிப் பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக மினி புரஜெக்டர் கருவிகளும் அதிகமாக கண்காட்சியில் இடம் பிடித்தன.

அத்தியாவசிய வீட்டு வசதி எலக்ட்ரானிக் பொருட்களுடன் போட்டி போடும் வகையில், அவசியமான தேவைகளுக்கு உதவும் ரோபோக்களின் வரவும் பெருகிய வண்ணம் உள்ளது. சி.இ.எஸ். கண்காட்சியிலும் பல புதிய ரோபோக்களின் வரவுகளைக் காண முடிந்தது. ஏயோலஸ், ரோசி, பட்டி, கீக்கர் என பல்வேறு ஹவுஸ்கீப்பர் ரோபோக்கள், செயற்கை அறிவு ரோபோக்கள் கவனம் ஈர்த்தன. கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டாவும் சமீபகாலமாக ரோபோ தயாரிப்பில் கவனம் செலுத்துகிறது. எல்.ஜி., சோனி நிறுவனங்களும் சின்னச்சின்ன சேவைகளில் ஈடுபடும் ரோபோக்களை உருவாக்கி விற்பனைக்குவிட்டு வருகின்றன.

எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு அடுத்தபடியாக ஆரோக்கியத்தை அளவிடும் அணி கருவிகளின் பயன்பாடு பெருகி வருகிறது. எனவே ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் பலவும் அணிகருவிகள் தயாரிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. இவை அல்லாமல் பிட்பிட் போன்ற சில நிறுவனங்கள் அணிகருவிகளை மட்டுமே தயாரித்து வழங்குகின்றன. எனவே எண்ணற்ற வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வாட்ச்கள், ஸ்மார்ட்பேண்டுகள் நிறைய அறிமுகமாகி உள்ளன.

கண்காட்சியில் உலகின் மிகமென்மையான ஏசர் மடிக்கணினி, டேப்லட்கள், விர்ச்சுவல் ரியாலிட்டி சாதனங்கள், எலக்ட்ரிக் வாகனங்களும் கண்காட்சியை ரசிக்க வைத்தது. அசுர வேக இணையதளச் சந்தை புதுமையான இந்த சாதனங்களை வெகு வேகமாகவே உங்கள் கைகளில் தவழ வைத்து விடும் என்பதில் சந்தேகமில்லை!

Next Story