போக்குவரத்து விதிகள் குறித்து குறும்படம் மூலம் விழிப்புணர்வு


போக்குவரத்து விதிகள் குறித்து குறும்படம் மூலம் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 18 May 2022 4:19 PM GMT (Updated: 18 May 2022 4:19 PM GMT)

பொள்ளாச்சி பகுதிகளில் குறும்படம் மூலம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதிகளில் குறும்படம் மூலம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

விழிப்புணர்வு

பொள்ளாச்சி பகுதியில் ஹெல்மெட் அணியாதது, செல்போன் பேசிக் கொண்டும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. 

இதை தடுக்க பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் குறும்படம் மூலம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சி பஸ் நிலையம், காந்தி சிலை உள்பட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நேற்று மாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமை தாங்கினார். 

பொதுமக்கள் ஆர்வமுடன் குறும்படத்தை கண்டுகளித்தனர். மேலும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

போக்குவரத்து விதிமுறை மீறல்

நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப விபத்துகளும் அதிகமாக நடக்கிறது. பெரும்பாலான விபத்துகளில் தலையில் காயம் ஏற்படுவதால் ரத்தம் அதிகமாக வெளியேறி உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதை தடுக்க ஹெல்மெட் அணிந்து வாகனங்கள் ஓட்ட வேண்டும். ஆனால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பதில்லை.

தற்போது நாடகம், பாட்டு, கார்டூன் உள்ளிட்ட 30 நிமிட குறும்பட வீடியோ காட்சி மூலம் நகர்ப்புறம் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து கற்றுக்கொடுக்க வேண்டும். 

மேலும் 18 வயது பூர்த்தி அடையாத மாணவ-மாணவிகளை வாகனங்கள் ஓட்ட பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது. போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து விபத்துகளை குறைக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story