உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு: ரிசர்வ் வங்கி செயல்பாட்டில் மத்திய அரசு தலையீடா? நிதி அமைச்சகம் விளக்கம்

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு: ரிசர்வ் வங்கி செயல்பாட்டில் மத்திய அரசு தலையீடா? நிதி அமைச்சகம் விளக்கம்
x
தினத்தந்தி 15 Jan 2017 10:45 PM GMT (Updated: 15 Jan 2017 9:51 PM GMT)

உயர்மதிப்பு ரூபாய்நோட்டுகள் ஒழிக்கப்பட்ட பிறகு, இது தொடர்பான ஒருங்கிணைப்பிற்காக அதிகாரி ஒருவரை மத்திய அரசு நியமித்தது.

புதுடெல்லி

உயர்மதிப்பு ரூபாய்நோட்டுகள் ஒழிக்கப்பட்ட பிறகு, இது தொடர்பான ஒருங்கிணைப்பிற்காக அதிகாரி ஒருவரை மத்திய அரசு நியமித்தது.

ஆனால், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேலுக்கு, ரிசர்வ் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஐக்கியப் பேரவை ஒரு கடிதம் எழுதியது. அதில், ‘‘உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வுகளும், ரூபாய் நோட்டு ஒருங்கிணைப்பில் ஒரு அதிகாரியை அரசு நியமித்து ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியில் தலையிட்டும் அவமதிப்பதாக ஊழியர்கள் கருதுகின்றனர்’’ என கூறப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுபற்றி நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தையும், தன்னாட்சியையும் மத்திய அரசு உறுதிபட முழுமையாக மதிக்கிறது’’ என கூறப்பட்டுள்ளது.

மேலும், ‘‘அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே பல மட்டங்களில், பொதுமக்களுடன் தொடர்புடைய பல வி‌ஷயங்களில் கலந்தாலோசனைகள் நடைபெற்றுள்ளன. சட்டத்தால் அல்லது நடைமுறை வழக்கத்தால் அப்படி கட்டாயமாக நடத்தப்பட வேண்டிய கலந்தாலோசனைகளை ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி மீதான வரம்புமீறல் என எடுத்துக்கொள்ளக்கூடாது’’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story