பீகாரில் பரிதாப சம்பவம் கங்கை நதியில் படகு கவிழ்ந்து 25 பேர் பலி


பீகாரில் பரிதாப சம்பவம் கங்கை நதியில் படகு கவிழ்ந்து 25 பேர் பலி
x
தினத்தந்தி 15 Jan 2017 11:45 PM GMT (Updated: 15 Jan 2017 10:14 PM GMT)

பீகாரில் கங்கை நதியில் படகு கவிழ்ந்து 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாட்னா

பீகாரில் கங்கை நதியில் படகு கவிழ்ந்து 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

மகர சங்கராந்தி விழா

வட இந்திய மாநிலங்களில் நேற்று முன்தினம் ‘மகர சங்கராந்தி’ பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பீகாரின் சரண் மாவட்டத்துக்கு உட்பட்ட சபல்பூர் பகுதியில் கங்கை ஆற்று படுகையில் பட்டம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவை கண்டுகளிப்பதற்காகவும், அங்குள்ள பொழுதுபோக்கு பூங்காவை காணவும் பாட்னாவில் இருந்து ஏராளமானோர் சென்றனர். ஏராளமான படகுகள் மூலம் கங்கை நதியை கடந்து அங்கு சென்றிருந்த மக்கள், மாலையில் பாட்னாவுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

நீரில் மூழ்கினர்

இவ்வாறு 40–க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு நாட்டுப்படகு ஒன்று பாட்னாவை நோக்கி வந்து கொண்டிருந்தது. 25 பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய அந்த படகில் 40–க்கும் மேற்பட்டோர் இருந்ததால், நதியின் மையப்பகுதியில் வந்தபோது அது திடீரென கவிழ்ந்தது.

இதனால் அதில் இருந்த பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கினர். இதில் சில பயணிகள் மட்டுமே நீந்தி கரையை அடைந்தனர். ஆனால் குழந்தைகள், பெண்கள் உள்பட பலர் நதியில் மூழ்கி உயிரை விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இரவில் மீட்பு பணிகள் நிறுத்தம்

இது குறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட போலீசார் மற்றும் மீட்புப்படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர். மேலும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த 150 வீரர்கள் மற்றும் மாநில மீட்புக்குழுவினரும் களத்தில் இறக்கப்பட்டனர்.

இந்த மீட்புப்படையினர் குழந்தைகள் உள்பட 19 பேரின் உடல்களை நேற்று முன்தினம் மீட்டனர். பின்னர் இருள் சூழ்ந்ததாலும், கடும் குளிர் வாட்டியதாலும் இரவில் மீட்புப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் நேற்று அதிகாலையில் மீண்டும் மீட்புப்பணிகள் தொடங்கப்பட்டன. இதில் மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

25 பேர் பலி

இவர்களையும் சேர்த்து மொத்தம் 25 பேர் இந்த விபத்தில் பலியாகி இருந்தது தெரியவந்தது. அளவுக்கு அதிகமானோர் படகில் ஏறியதே இந்த விபத்துக்கு காரணம் எனவும், நதியின் மையப்பகுதியில் வந்தபோது இந்த படகு மற்றொரு படகுடன் மோதியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து சரண் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொழுதுபோக்கு பூங்கா மற்றும் படகின் உரிமையாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பிரதமர் இரங்கல்

பீகார் படகு விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடும் அறிவித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமும் அறிவித்துள்ளார்.

முன்னதாக தலைநகர் பாட்னாவை வடக்கு பீகாருடன் இணைக்கும் வகையில் கங்கை நதியின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள மகாத்மா காந்தி பாலத்தின் பராமரிப்பு பணிகளை பிரதமர் நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் விபத்தை தொடர்ந்து அவர் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார்.

இதைப்போல மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியினர் மற்றும் லாலு பிரசாத் ஆகியோரும் மகர சங்கராந்தி சிறப்பு நிகழ்ச்சிகளை ரத்து செய்தனர்.


Next Story