தமிழக சட்டசபையில் நடந்த அமளி ஜனநாயகத்துக்கு அவமானம் வெங்கையா நாயுடு கருத்து


தமிழக சட்டசபையில் நடந்த அமளி ஜனநாயகத்துக்கு அவமானம் வெங்கையா நாயுடு கருத்து
x
தினத்தந்தி 19 Feb 2017 11:30 PM GMT (Updated: 19 Feb 2017 9:39 PM GMT)

தமிழக சட்டசபையில் நடந்த அமளி, ஜனநாயகத்துக்கு அவமானம் என்று மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கையா நாயுடு கூறினார்.

ஐதராபாத்,

தமிழக சட்டசபையில் நடந்த அமளி, ஜனநாயகத்துக்கு அவமானம் என்று மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கையா நாயுடு கூறினார்.

சட்டசபையில் அமளி

தமிழக முதல்–அமைச்சராக அ.தி.மு.க. சசிகலா அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி கடந்த 16–ந் தேதி பதவி ஏற்றார். அவர் 15 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். ஆனால் முன்கூட்டியே பெரும்பான்மையை நிரூபிக்க முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தார்.

அதன்படி அவர் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று முன்தினம் கூட்டப்பட்டது. அதில் வரலாறு காணாத அமளி நடந்தது. சபாநாயகரின் ‘மைக்’ உடைக்கப்பட்டது. மேஜை தள்ளி விடப்பட்டது. இருக்கைகள் தூக்கி வீசப்பட்டன. உறுப்பினர்களின் சட்டைகள் கிழிக்கப்பட்டன. காகிதங்கள், ஆவணங்கள் கிழித்தெறியப்பட்டன. சட்டசபை, போர்க்களமானது. அவற்றை தொலைக்காட்சிகளில் பார்த்த மக்கள், வெட்கித் தலைகுனிந்தனர்.

ஜனநாயகத்துக்கு அவமானம்

இது தொடர்பாக மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கையா நாயுடு நேற்று ஐதராபாத்தில் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக சட்டசபையில் நடந்த நிகழ்வுகள், ஜனநாயகத்துக்கு அவமானகரமானவை. சம்பந்தப்பட்ட அனைவரும் கண்டிப்பாக சுய பரிசோதனை செய்ய வேண்டும். இனி இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்காதபடிக்கு பார்த்துக்கொள்ள வேண்டும்.

மக்கள் எம்.பி.க்களை, எம்.எல்.ஏ.க்களை தங்கள் முன்மாதிரிகளாக கொள்கின்றனர். ஆனால் மக்கள் பிரதிநிதிகள் இப்படி நடந்துகொள்கிறபோது, ஜனநாயக அமைப்புகள் மீதும், அரசியல் அமைப்பின் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்து விடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story