49 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி எதிரொலி நாகாலாந்து முதல்–மந்திரி திடீர் ராஜினாமா பா.ஜனதா தலைமையில் புதிய அரசு அமைக்க தீவிரம்


49 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி எதிரொலி நாகாலாந்து முதல்–மந்திரி திடீர் ராஜினாமா பா.ஜனதா தலைமையில் புதிய அரசு அமைக்க தீவிரம்
x
தினத்தந்தி 19 Feb 2017 11:30 PM GMT (Updated: 19 Feb 2017 9:58 PM GMT)

49 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியதால் நாகாலாந்து முதல்–மந்திரி ஜெலியாங் ராஜினாமா செய்தார்.

கொகிமா,

49 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியதால் நாகாலாந்து முதல்–மந்திரி ஜெலியாங் ராஜினாமா செய்தார்.

இயல்பு வாழ்க்கை முடக்கம்

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், நாகா மக்கள் முன்னணி தலைமையிலான ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணிக்கு பா.ஜனதாவின் 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் உள்ளது. முதல்–மந்திரியாக டி.ஆர்.ஜெலியாங் பதவி வகித்து வந்தார்.

மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு செய்து கடந்த மாத தொடக்கத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதல்–மந்திரி ஜெலியாங் பதவி விலக கோரியும், நாகாலாந்து பழங்குடியினர் நடவடிக்கை குழு கடந்த 30–ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்கவில்லை. அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப் போய் உள்ளது.

போர்க்கொடி

இந்த நிலையில் ஆளும் ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 49 பேர் முதல்–மந்திரிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இவர்கள் அனைவரும், தற்போது பக்கத்து மாநிலமான அசாம் மாநிலத்தின் காசிரங்கா பூங்கா பகுதிக்கு சென்று அங்குள்ள சொகுசு விடுதியில் தங்கி இருக்கின்றனர்.

மாநில மக்களின் விருப்பத்தின்படி நாகாலாந்து எம்.பி.யும், முன்னாள் முதல்–மந்திரியுமான நெய்பியூ ரியோவை உடனடியாக முதல்–மந்திரியாக நியமிக்கவேண்டும் என்று கூட்டணியின் தலைமையிடம் எழுத்துப்பூர்வமாக இவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். ரியோ எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நாகா மக்கள் முன்னணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர் ஆவார்.

பா.ஜனதா தலைமையில் ஆட்சி

இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் அழைப்பை தொடர்ந்து நாகாலாந்து கவர்னர் பி.பி.ஆச்சார்யா, ஜெலியாங்குடன் டெல்லி விரைந்தார். அவர்கள் ராஜ்நாத் சிங்குடன் நாகாலாந்து விவகாரம் தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தினர். இதேபோல் நெய்பியூ ரியோவும் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார்.

இதற்கிடையே நாகாலாந்தில், நெய்பியூ ரியோ தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமையும் என்று தகவல் வெளியாகி உள்ளது. நாகா மக்கள் முன்னணி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பா.ஜனதாவில் இணைந்து புதிய ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

திடீர் ராஜினாமா

இந்த நிலையில் ஜெலியாங் நேற்று இரவு முதல்–மந்திரி பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இந்த தகவலை முதல்–மந்திரி அலுவலகம் உறுதி செய்தது. நாகா மக்கள் முன்னணியின் புதிய சட்டசபை தலைவர் (முதல்–மந்திரி) இன்று தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

60 உறுப்பினர்களை கொண்ட நாகாலாந்து சட்டசபையில் நாகா மக்கள் முன்னணிக்கு 46 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதாவுக்கு 4 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றுக்கு தலா ஒரு உறுப்பினரும், சுயேச்சைகள் 8 பேரும் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.


Next Story