வங்கி ஏ.டி.எம்.மில் ரூ.2,000 கள்ள நோட்டுகள் வந்தது பற்றி விசாரணை


வங்கி ஏ.டி.எம்.மில் ரூ.2,000 கள்ள நோட்டுகள் வந்தது பற்றி விசாரணை
x
தினத்தந்தி 23 Feb 2017 10:30 PM GMT (Updated: 23 Feb 2017 10:19 PM GMT)

வங்கி ஏ.டி.எம்.மில் ரூ.2,000 கள்ள நோட்டுகள் வந்தது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று மத்திய மந்திரி தெரிவித்தார்.

புதுடெல்லி

வங்கி ஏ.டி.எம்.மில் ரூ.2,000 கள்ள நோட்டுகள் வந்தது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று மத்திய மந்திரி தெரிவித்தார்.

கள்ள நோட்டுகள்

தெற்கு டெல்லியில் உள்ள சங்கம் விஹார் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையத்தில் வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுத்தார். அப்போது ‘ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா’ என்று இருக்க வேண்டிய இடத்தில் ‘சில்ட்ரன் பாங்க் ஆப் இந்தியா’ என அச்சிடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் ரிசர்வ் வங்கி கவர்னர் பெயர், அவருடைய கையெழுத்து, அசோக சக்கரம், வரிசை எண் என எந்த ஒரு பாதுகாப்பு அம்சங்களும் அந்த நோட்டுகளில் இல்லை.

இதனால் அவர் வங்கி காவலாளியிடம் அந்த கள்ள நோட்டுகளை காண்பித்தார். பின்னர் வங்கி ஏ.டி.எம்.மில் கள்ள நோட்டுகள் வந்தது குறித்து டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழப்பம் ஏற்படுத்த...

இதுபற்றி அறிந்த மத்திய நிதி இணை மந்திரி சந்தோஷ் கங்வார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:–

வங்கி ஏ.டி.எம்.மில் கள்ள நோட்டுகள் வந்தது எங்களுக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. சம்பந்தப்பட்ட வங்கி ஏ.டி.எம். டெல்லியில் புறநகர் பகுதியில் உள்ளது. பொதுவாக ஏ.டி.எம்.களில் கள்ள நோட்டுகள் வராது. அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்த இச்செயலை திட்டமிட்டு யாரோ வைத்திருப்பதாகவே சந்தேகிக்கிறோம்.

அரசு கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், கருப்பு பணத்தை தடுக்கவும் பாடுபட்டு வருகிறது. ஆனால் சிலர் நாட்டில் குழப்பம் ஏற்படுத்த இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விசாரணை நடத்தப்படும்

வங்கி ஏ.டி.எம்.களுக்கு பணத்தை எடுத்துச்செல்லும்போதோ அல்லது பணத்தை நிரப்பும் போதோ இந்த கள்ள நோட்டுகளை 3–வது நபர் யாராவது கலந்து இருக்கலாம் என கருதுகிறோம். எனவே இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். மேலும் கள்ள நோட்டுகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஸ்டேட் வங்கி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தலைமை வங்கிகளில் இருந்து கிளை வங்கிகளுக்கும், ஏ.டி.எம்.களுக்கும் கள்ள நோட்டுகள் செல்ல வாய்ப்பே இல்லை. அனைத்து ரூபாய் நோட்டுகளும் கவனமாக ஆய்வு செய்யப்பட்டே அனுப்பப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story