நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை: முக்கிய குற்றவாளி கைது


நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை: முக்கிய குற்றவாளி கைது
x
தினத்தந்தி 23 Feb 2017 11:00 PM GMT (Updated: 23 Feb 2017 10:22 PM GMT)

நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான சுனில்குமார் மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டனர்.

கொச்சி,

நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான சுனில்குமார் மற்றும் அவரது கூட்டாளி ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். கோர்ட்டில் சரண அடைய வந்த அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

பாலியல் தொல்லை

தமிழ், மலையாளம் மற்றும் கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் பாவனா. சித்திரம் பேசுதடி, ஆர்யா, அசல் உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்துள்ள இவர், கடந்த 17–ந்தேதி மலையாளப்படம் ஒன்றின் படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு இரவில் வீடு திரும்பினார்.

செல்லும் வழியில் அவரது காரை வழிமறித்த மர்ம நபர்கள் சிலர் அவரை காருடன் கடத்தி சென்றனர். பின்னர் ஓடும் காரிலேயே அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அதை தங்கள் செல்போனிலும் படம் பிடித்துக்கொண்டனர். சுமார் 2 மணி நேரம் இந்த சதிச்செயலை அரங்கேற்றிய அவர்கள் பின்னர் அவரை கொச்சி அருகே விட்டு விட்டு தப்பி ஓடினர்.

3 பேர் கைது

இந்த சம்பவம் கேரளா மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கயவர்களை கைது செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் அமைப்பினர் போராட்டங்களை நடத்தினர். இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் முதல்–மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

கேரள உள்துறையையும் கவனித்து வரும் முதல்–மந்திரி பினராயி விஜயன், பாவனா கடத்தப்பட்ட விவகாரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

எனினும் முக்கிய குற்றவாளியான ‘பல்சர் சுனி’ என்று அழைக்கப்படும் சுனில் குமார் மற்றும் சிலர் தப்பி ஓடினர். அவர்களையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். மேலும் அவர்கள் சரணடையக்கூடும் என்ற தகவல் வெளியானதால் கோர்ட்டுகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மடக்கிப்பிடித்தனர்

இந்த நிலையில் சுனில் குமார் மற்றும் அவரது கூட்டாளியான விஜீஷ் ஆகியோர் எர்ணாகுளம் கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைவதற்காக நேற்று மதியம் 1.10 மணியளவில் வந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த போலீசார், இருவரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் விசாரணைக்காக ஆலுவாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த தகவலை உறுதி செய்த எர்ணாகுளம் போலீஸ் ஐ.ஜி. விஜயன், இது குறித்து கூறுகையில், ‘எர்ணாகுளம் நகர் முழுவதும் போலீசாரை நாங்கள் நிறுத்தி இருந்தோம். அவர்கள் கச்சிதமாக செயல்பட்டு 2 பேரையும் கைது செய்தனர். அவர்களை நாங்கள் காவலில் எடுத்துள்ளோம்’ என்று கூறினார்.

கோர்ட்டில் சரணடைய வந்த இருவரையும் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து சென்றதாக, இருவரின் வக்கீல்களும் குற்றம் சாட்டினர். போலீசார் ஹெல்மெட் அணிந்து கொண்டு கோர்ட்டு அறைக்குள் நுழைந்து இருவரையும் கைது செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

முதல்–மந்திரி பாராட்டு

பாவனா கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டதற்கு முதல்–மந்திரி பினராயி விஜயன் மகிழ்ச்சி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறும்போது, ‘குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை நான் பாராட்டுகிறேன். இது ஒரு பாராட்டத்தக்க சாதனை’ என்று தெரிவித்தார்.

ஆனால் கோர்ட்டு அறையில் இருந்து இருவரையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றது முறையல்ல என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் உள்துறை மந்திரியுமான ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.


Next Story