இஸ்லாமியர்களுக்கு அதிகமான ஒதுக்கீடு வழங்கினால் தெலுங்கானாவிலும் ஒரு யோகி, பா.ஜனதா


இஸ்லாமியர்களுக்கு அதிகமான ஒதுக்கீடு வழங்கினால் தெலுங்கானாவிலும் ஒரு யோகி, பா.ஜனதா
x
தினத்தந்தி 23 March 2017 5:58 AM GMT (Updated: 23 March 2017 5:57 AM GMT)

இஸ்லாமியர்களுக்கு அதிகமான ஒதுக்கீடு வழங்கினால் தெலுங்கானாவிலும் ஒரு யோகி வெளிப்படுவார் என பா.ஜனதா தலைவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ஐதராபாத்,

இஸ்லாமியர்களுக்கு அதிகமான இட ஒதுக்கீடு என்ற திட்டங்களுடன் டிஆர்எஸ் அரசு நகர்ந்தால் போராட்டம் நடத்தப்படும் என பா.ஜனதா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது. தெலுங்கானா மாநில பா.ஜனதா தலைவர் வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இஸ்லாமியர்களுக்கான ஒதுக்கீட்டை உயர்த்தினால், தெலுங்கானாவிலும் ஒரு யோகி வெளிப்படுவார் என மாநிலத்தில் உள்ள தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அரசை எச்சரித்து உள்ளார். 

தெலுங்கானா மாநில ராஷ்டிரிய சமிதி அரசு இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 4 சதவிதத்தில் இருந்து 12 சதவிதமாக உயர்த்த திட்டமிட்டு உள்ளநிலையில் தெலுங்கானா மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. என்விஎஸ்எஸ் பிரபாகர் இந்த எச்சரிக்கையை விடுத்து உள்ளார். 

உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்று யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக பதவியேற்றார். இதனை குறிப்பிட்டு பேசிஉள்ள பிரபாகர், “இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்தால், தெலுங்கானாவிலும் ஒரு யோகி வெளிப்படுவார்,” என்றார். தெலுங்கானா பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சிறுபான்மையினருக்காக பணியாற்றி பணியாற்றி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அநீதியை இழைத்து வருகிறது எனவும் குற்றம் சாட்டிஉள்ளார். 

தெலுங்கானா மாநில முதல்-மந்திரி கே. சந்திரசேகர ராவ், இஸ்லாமியர்கள் மற்றும் எஸ்.சி. பிரிவினருக்கு அதிகமான இட ஒதுக்கீடு வழங்கும் வகையிலான மசோதா மாநில சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்படும் என கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்த பா.ஜனதா போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்து உள்ளது. மாநில பா.ஜனதா தலைவர் கே லட்சுமணன் பேசுகையில் மத ரீதியிலான இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புக்கு எதிரானது என வலியுறுத்தி உள்ளார். இவ்விவகாரத்தில் முன்னதாக நீதிமன்றங்கள் எடுத்த நடவடிக்கையையும் குறிப்பிட்டு உள்ளார்.

Next Story