பெங்களூருவில் பதுக்கி வைத்திருந்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக ரூ.1.28 கோடி பறிமுதல்


பெங்களூருவில் பதுக்கி வைத்திருந்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக ரூ.1.28 கோடி பறிமுதல்
x
தினத்தந்தி 24 March 2017 3:45 AM GMT (Updated: 24 March 2017 3:45 AM GMT)

பெங்களூருவில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த ரியல்எஸ்டேட் அதிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

பெங்களூரு,  
 
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான ரியல்எஸ்டேட் அலுவலகத்தில் பழைய 500, 1,000 ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சிகள் நடப்பதாகவும் குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த ரியல்எஸ்டேட் அலுவலகத்தில் புகுந்து குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கட்டுக்கட்டாக பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் குவித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே அந்த அலுவலகத்தை நடத்தி வரும் 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தார்கள். விசாரணையில், அவர்கள் பெங்களூரு கோனனகுண்டேயை சேர்ந்த ராகுல்(வயது 34) மற்றும் தாவணகெரே மாவட்டம் ஒன்னாவரா பகுதியைச் சேர்ந்த அஜய்(26) என்று தெரிந்தது. இவர்கள் 2 பேரும் ரியல்எஸ்டேட் அதிபர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களது அலுவலகத்தில் பதுக்கி வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுகள் குறித்து கேட்டதற்கு, 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார்கள். மேலும் அந்த பணத்திற்கு உரிய எந்த ஆவணங்களும் 2 பேரிடமும் இல்லை என்றும் தெரியவந்தது.

ரூ.1.28 கோடி பறிமுதல்

அதைத்தொடர்ந்து, ரியல்எஸ்டேட் அதிபர்கள் ராகுல், அஜயை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தார்கள். அவர்களது அலுவலகத்தில் பதுக்கி வைத்திருந்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக ரூ.1.28 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த ரூபாய் நோட்டுகளை 2 பேரும் மாற்றுவதற்காக பதுக்கி வைத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அதுதொடர்பாக ராகுல், அஜய் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதான ராகுல் மற்றும் அஜய் மீது சேஷாத்திரிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேற்கண்ட தகவலை பெங்களூரு மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரவீன் சூட் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.


Next Story