ஏர் இந்தியாவை தொடர்ந்து இண்டிகோ விமான நிறுவனமும் சிவசேனா எம்.பியின் டிக்கெட்டை ரத்து செய்தது


ஏர் இந்தியாவை தொடர்ந்து இண்டிகோ விமான நிறுவனமும் சிவசேனா எம்.பியின் டிக்கெட்டை ரத்து செய்தது
x
தினத்தந்தி 24 March 2017 12:06 PM GMT (Updated: 24 March 2017 12:22 PM GMT)

ஏர் இந்தியாவை தொடர்ந்து இண்டிகோ விமான நிறுவனமும் சிவசேனா எம்.பி ரவீந்திர கெய்க்வாட்டின் டிக்கெட்டை ரத்து செய்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான நிறுவன  ஊழியரை தாக்கியதால்   கடும் சர்ச்சையில் சிவசேனா எம்.பி ரவீந்திர கெய்க்வாட் சிக்கியுள்ளார்.  இந்த விவகாரத்தில் கெய்க்வாட் எம்பிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அவர்  புக் செய்திருந்த  டிக்கெட்டை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்ததது.  இந்த நிலையில், இண்டிகோ விமான நிறுவனமும் சிவசேனா எம்.பியை விமானத்தில் பயணிக்க அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் இருந்து புனே செல்வதற்கு ரவீந்திர கெய்க்வாட் இண்டிகோ விமானத்தில் டிக்கெட் புக் செய்து இருந்ததாகவும் அதை இண்டிகோ ரத்து செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதே விவகாரம் தொடர்பாக விஸ்தாரா விமான நிறுவனமும் ஏர் இந்தியாவுடன் இணைந்து கெய்க்வாட்டிற்கு தடை விதித்துள்ளது. அதேபோல் மேலும் 4 தனியார் விமான நிறுவனங்களும் கெய்க்வாட் விமான பயணத்திற்கு தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது. 

விஸ்தாரா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இந்த விவகாரம் பற்றி கூறுகையில், “ பயணிகளின் மோசமான நடத்தை மிகவும் தீவிரமான விவகாரம். இதை சகித்துக்கொள்ள முடியாது. விமான போக்குவரத்து போன்ற துறைகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்தை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஏர் இந்தியா மற்றும் பிஐஏ வெளியிட்ட அறிக்கைக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். இந்த தடைக்கு முழு கண்ணியத்துடன் நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். சம்பந்தப்பட்ட நபர் எங்கள் நிறுவனத்தின்  அனைத்து விமானத்திலும் பயணம் செய்ய உடனடியாக தடை விதிக்கப்படுகிறார்” என்று தெரிவித்தார். 

Next Story