மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்ற சோனியா டெல்லி திரும்பினார்


மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்ற சோனியா டெல்லி திரும்பினார்
x
தினத்தந்தி 24 March 2017 8:45 PM GMT (Updated: 24 March 2017 7:28 PM GMT)

சோனியா காந்தி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வாரணாசியில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் நடந்த பேரணியில் கலந்துகொண்டபோது, அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து அவர் டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வீடு திரும்பினார். அதன் பின்னரும் அவர் தொடர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததால் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வந்தார்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலின்போது அவர் கட்சியின் சார்பில் நடைபெற்ற எந்த பிரசார கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை.

இதற்கிடையே, இந்த மாத தொடக்கத்தில் அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு புறப்பட்டு சென்றார். இருப்பினும் அவர் எந்த நாட்டிற்கு சென்றார் என்ற தகவல் வெளியாகவில்லை.

இந்தநிலையில், சோனியா காந்தியை இந்தியா அழைத்து வருவதற்காக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கடந்த 16–ந் தேதி வெளிநாடு புறப்பட்டு சென்றார். சோனியா காந்தியின் மருத்துவபரிசோதனைகள் முடிவடைந்ததை தொடர்ந்து அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்.

வழக்கமாக சோனியா காந்தி இதுபோன்ற மருத்துவபரிசோதனைகளுக்காக அமெரிக்கா செல்வது வழக்கம் என்றபோதிலும் தற்போது அவர் எந்த நாட்டிற்கு சென்று திரும்பி உள்ளார் என்பது உறுதிசெய்யப்படவில்லை.


Next Story