5 மாநில சட்டசபை தேர்தலில் முறைகேடு புகார்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்யக்கோரி வழக்கு


5 மாநில சட்டசபை தேர்தலில் முறைகேடு புகார்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்யக்கோரி வழக்கு
x
தினத்தந்தி 24 March 2017 11:00 PM GMT (Updated: 24 March 2017 7:53 PM GMT)

5 மாநில சட்டசபை தேர்தலில் மோசடி புகார் எழுந்துள்ளதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வுக்கு உட்படுத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

புதுடெல்லி

5 மாநில சட்டசபை தேர்தலில் மோசடி புகார் எழுந்துள்ளதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வுக்கு உட்படுத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் கமி‌ஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

பொதுநல வழக்கு தாக்கல்

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்ட சபைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் முறைகேடு நடந்ததாக பகுஜன் சமாஜ் கட்சியும், பஞ்சாப் தேர்தலில் முறைகேடு என ஆம் ஆத்மியும் குற்றம் சாட்டின.

இது தொடர்பாக எம்.எல்.சர்மா என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியிருந்ததாவது:–

மாற்றியமைக்க முடியும்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், எந்திரவியல் மற்றும் மென்பொருள் (சாப்ட்வேர்) போன்ற விவரங்கள் ரகசியமாக இருக்கும் வரை அவை நம்பகமானதாக இருக்கும் என தேர்தல் கமி‌ஷன் கூறியுள்ளது. ஆனால் இந்த விவரங்களை தலைகீழ் பொறியியல் முறைப்படி எந்தவொரு நிபுணராலும் கண்டுபிடிக்க முடியும்.

இந்த தலைகீழ் பொறியியல் முறைப்படி வயர்லெஸ் கருவிகள் அல்லது அதற்கான மென்பொருளை தயாரிக்க முடியும். இந்த வழிமுறைகளால் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் வாக்குப்பதிவு ஆவணங்களை எளிதாக மாற்றியமைக்க முடியும்.

பரிசோதிக்க வேண்டும்

எனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் தரம், மென்பொருள் மற்றும் முடக்க விளைவுகள் போன்றவற்றை நம்பகமான எலக்ட்ரானிக் சோதனைக்கூடம் மற்றும் விஞ்ஞானிகள் அல்லது மென்பொருள் நிபுணர்கள் மூலம் பரிசோதிக்க வேண்டும். இதில் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அந்த பரிசோதனை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் வக்கீல் எம்.எல்.சர்மா கூறியிருந்தார்.

அரசியல் கட்சியின் நலன்

சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை மற்றும் மராட்டிய உள்ளாட்சி தேர்தல்களில் முறைகேடு நடந்துள்ளதாக குறிப்பிட்டு இருந்த அவர், ஒரு அரசியல் கட்சியின் சொந்த நலனுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி நடந்திருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். எனினும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்த மத்திய அரசு அல்லது வேறு யாருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படவில்லை.


Next Story