இந்தியாவிற்கு எஃப்-16 விமானங்களை விற்க அமெரிக்க எம்பிக்கள் கோரிக்கை

இந்தியாவிற்கு எஃப்-16 விமானங்களை விற்க அமெரிக்க எம்பிக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 25 March 2017 9:07 AM GMT (Updated: 25 March 2017 9:07 AM GMT)

அமெரிக்காவின் இரு முக்கிய எம்பிக்கள் இந்தியாவிற்கு எஃப்-16 ரக விமானங்களை விற்பதற்காக டிரம்ப் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர். பசிபிக் பகுதியில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகையில் இந்தியாவிற்கு இந்த ரக விமானங்களை விற்பது அவசியம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

வாஷிங்டன்

வெர்ஜினியாவின் மார்க் வார்னரும். டெக்சாஸின் ஜான் கார்னினும் இணைந்து அமெரிக்க பாதுகாப்பு செயலருக்கும், வெளியுறவு செயலருக்கும் எழுதியுள்ள கடிதத்தில் தற்போது நடைபெற்று வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு பேச்சுவார்த்தையின் போதே இந்த விஷயத்தையும் பேசும் படி கோரியுள்ளனர். இவ்விருவரும் இந்தியாவிற்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உட்குழு ஒன்றின் துணைத் தலைவர்களாக உள்ளனர். குறிப்பிட்ட நாட்டிற்கென்று தனியாக அமைக்கப்பட்டுள்ள ஓர் உட்குழு இதுவாகும்.

இந்தியாவும் தனது பாதுகாப்பு காரணங்களுக்காக எஃப்-16 அல்லது சாப்பின் க்ரிபென் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது. அதைப் பயன்படுத்தும்படி எம்பிக்கள் கோருகின்றனர். மேலும் பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்படி விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் கோரிகைக்கும் இணங்கலாம் என்றும் இந்த எம்பிக்கள் பரிந்துரைக்கின்றனர். இத்திட்டம் இந்தியாவின் பாதுகாப்பிற்கும், அமெரிக்க விமான நிறுவனத்தின் வணிகத்திற்கும் பொதுவாக நன்மை பயக்கிறது; எனவே பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் இப்பரிமாற்றத்திற்கு முன்னுரிமைத் தர வேண்டும் என்கின்றனர் இவர்கள்.

இந்திய அமெரிக்க வருங்கால பாதுகாப்பு உறவிற்கு இந்த விற்பனை உதவும். மேலும் எதிர்காலத்தில் இந்தியா தனக்கு வடக்கிலிருந்தும். சீனாவிடமிருந்தும் வரக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தப் பரிமாற்றம் உதவும் என்கின்றனர் எம்பிக்கள். கடந்த இரு ஆட்சிகளின் போது உறுதியடைந்த இந்த அமெரிக்க இந்திய பாதுகாப்பு உறவை மேலும் வளர்க்க இந்த விமான விற்பனை உதவும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Next Story