இரட்டை விளக்கு மின்கம்பத்தை இரட்டை இலையாக்கிவிட்டனர் டிடிவி தினகரன் புகார்


இரட்டை விளக்கு மின்கம்பத்தை இரட்டை இலையாக்கிவிட்டனர் டிடிவி தினகரன் புகார்
x
தினத்தந்தி 27 March 2017 10:07 AM GMT (Updated: 27 March 2017 10:07 AM GMT)

இரட்டை மின்கம்பத்தை இரட்டை இலையாக்கிவிட்டனர் என தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

அ.தி.மு.க. இரண்டாக உடைந்து அக்கட்சியினர் சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வரும் நிலையில் நடைபெறும் தேர்தல் என்பதால், இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. என்ற கட்சி பெயரை பயன்படுத்த இரு அணியினருக்கும் தடை விதித்துள்ள தேர்தல் கமிஷன், அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையையும் முடக்கி இருக்கிறது.

மாற்று ஏற்பாடாக சசிகலா அணிக்கு அ.இ. அ.தி.மு.க. (அம்மா) என்ற புதிய பெயரையும், தொப்பி சின்னத்தையும் தேர்தல் கமிஷன் ஒதுக்கி இருக்கிறது. இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அ.இ. அ.தி.மு.க. (புரட்சித் தலைவி அம்மா) என்ற பெயரையும், இரட்டை விளக்கு மின்கம்பத்தையும் ஒதுக்கி உள்ளது. தற்போது தேர்தல் கமி‌ஷன் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கும், சசிகலா அணியினருக்கும் அனுமதித்துள்ள கட்சியின் பெயர்களும், ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்களும் வருகிற ஏப்ரல் 12–ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும். 

ஏப்ரல் 17–ந் தேதியன்று தேர்தல் கமி‌ஷன் விசாரணையின் போது எடுக்கப்படும் முடிவுக்குப் பிறகே இரட்டை இலை எந்த அணிக்கு ஒதுக்கப்படும் என்பது தெரியவரும். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இருதரப்பிலும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அரசியல் கட்சிகள் ஆர்.கே.நகரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் பன்னீர்செல்வம் தரப்பு இரட்டை மின்கம்பத்தை இரட்டை இலையாக தவறாக சித்தரிக்கின்றனர், தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் குழப்பம் அடைகின்றனர் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

Next Story