4 ஜி.எஸ்.டி. மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல்


4 ஜி.எஸ்.டி. மசோதாக்கள்  பாராளுமன்றத்தில் தாக்கல்
x
தினத்தந்தி 27 March 2017 11:45 PM GMT (Updated: 27 March 2017 9:45 PM GMT)

பாராளுமன்றத்தில் 4 ஜி.எஸ்.டி. மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வரி ஏய்ப்பு செய்வோருக்கு 5 ஆண்டுகள் வரை ஜெயில்.

புதுடெல்லி,

எதிர்க்கட்சிகள் ஆட்சேபனைக்கு இடையே பாராளுமன்றத்தில் 4 ஜி.எஸ்.டி. மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வரி ஏய்ப்பு செய்வோருக்கு 5 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்க இதில் வகை செய்யப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. வரி

மத்திய, மாநில அரசுகள் வசூலித்து வரும் பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ‘சரக்கு மற்றும் சேவை வரி’ (ஜி.எஸ்.டி.) என்ற பெயரில் ஒரே வரியாக வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பான அம்சங்களை விவாதித்து முடிவு செய்ய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில், மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என 4 வகையான விகிதங்களில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரியை ஜூலை 1–ந் தேதி அமலுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கு இன்னும் 4 மசோதாக்களை மத்திய அரசும், ஒரு மசோதாவை மாநில அரசுகளும் நிறைவேற்ற வேண்டும். இந்த மசோதாக்களுக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டது.

தாக்கல்

அதன்படி, ஜி.எஸ்.டி. தொடர்பான 4 மசோதாக்களை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மத்திய ஜி.எஸ்.டி., யூனியன் பிரதேச ஜி.எஸ்.டி., ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., வரைவு ஜி.எஸ்.டி. (மாநிலங்களுக்கான இழப்பீடு) ஆகியவையே அந்த மசோதாக்கள்.

இவற்றை தாக்கல் செய்வதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இவை இன்றைய (நேற்றைய) சபை அலுவலில் பட்டியலிடப்படவில்லை என்று அவர்கள் கூறினர். அதற்கு பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி எஸ்.எஸ்.அலுவாலியா, இந்த மசோதாக்கள், கடந்த வெள்ளிக்கிழமை இரவே அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டன என்று கூறினார்.

உடனே, எதிர்க்கட்சி எம்.பி.க்கள், ‘இணையதளத்தை எப்படி பார்க்க முடியும்? அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் விவாதிக்காதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ‘இந்த மசோதாக்கள், சனிக்கிழமை காலையில் எம்.பி.க்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன. எனவே, அவற்றை தாக்கல் செய்வதில் தவறு இல்லை’ என்று கூறி, எதிர்ப்பை நிராகரித்தார்.

அதிகபட்ச வரி 40 சதவீதம்

அருண் ஜெட்லி தாக்கல் செய்த 4 மசோதாக்களில் ஒன்றான மத்திய ஜி.எஸ்.டி. மசோதா, மத்திய அரசின் அனைத்து மறைமுக வரிகளையும் ஒருங்கிணைக்க வகை செய்கிறது. இதன் அதிகபட்ச வரி 20 சதவீதம் ஆகும்.

யூனியன் பிரதேச ஜி.எஸ்.டி. மசோதா, சண்டிகார், அந்தமான், லட்சத்தீவு, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன், டையு ஆகிய யூனியன் பிரதேசங்களில் வரி விதிப்புக்கு வகை செய்கிறது.

ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மசோதா, மாநிலங்களுக்கிடையிலான சரக்கு வர்த்தகம் மற்றும் சேவைகள் மீது மத்திய அரசு விதிக்கும் ஜி.எஸ்.டி. வரி தொடர்பானது ஆகும். இதன் அதிகபட்ச வரி 40 சதவீதம். இதன் வருவாயை மத்திய–மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும்.

மாநிலங்களுக்கான இழப்பீடு மசோதா, ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு இழப்பீடு வழங்க வகை செய்கிறது. 5 ஆண்டுகளுக்கு இந்த இழப்பீடு வழங்கப்படும். இதற்காக, ஆடம்பர பொருட்கள், புகையிலை பொருட்கள் மற்றும் குளிர் பானங்கள் மீதான 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாய், இழப்பீடாக வழங்கப்படும்.

கொள்ளை லாபம்
தடுக்கப்படும்

இந்த மசோதாக்களில், சிறு வணிகத்தை பாதுகாக்கும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. வரி குறைப்பின் பலன், நுகர்வோருக்கு கிடைப்பதை உறுதி செய்ய கொள்ளை லாபத்தை தடுக்கும் வழிமுறை இடம்பெற்றுள்ளது. இதற்கான அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

பரிமாற்றம் குறித்த தகவல்களை மறைத்தாலோ, வரி ஏய்ப்பில் ஈடுபட்டாலோ வரி ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி, கைது உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உண்டு. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 ஆண்டு வரை ஜெயில் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

மேற்கண்ட 4 மசோதாக்களும் ஒன்றாக விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படும். மக்களவையில் நிறைவேறிய பிறகு, டெல்லி மேல்–சபைக்கு செல்லும்.

Next Story