பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்த டிரம்ப் தேர்தல் வெற்றிகளுக்கு வாழ்த்து


பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்த டிரம்ப் தேர்தல் வெற்றிகளுக்கு வாழ்த்து
x
தினத்தந்தி 28 March 2017 3:42 AM GMT (Updated: 28 March 2017 3:42 AM GMT)

பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சட்டசபை தேர்தல் வெற்றிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


புதுடெல்லி,

இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றியை பெற்றது. பஞ்சாப்பில் கூட்டணி ஆட்சியை இழந்த பா.ஜனதா மணிப்பூர், கோவா மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை அமைத்து உள்ளது. பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு ஒழிப்பு திட்டம், வளர்ச்சித் திட்டங்களுக்கு கிடைத்த அமோக ஆதரவே இந்த வெற்றிகளுக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடியுடன் நேற்றிரவு தொலைபேசியில் பேசி உள்ளார். 

அப்போது பாரதீய ஜனதா சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி பெற்றதற்கு டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்து உள்ளார் என வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொலைபேசி உரையாடலின் போது இருவரும் தெற்காசியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் நிலவும் அரசியல் சூழல் பற்றி இருவரும் விரிவாக, விவாதித்தாகக் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் பயங்கரவாதத்திற்கு எதிராக போராட அமெரிக்காவுடன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கரம்கோர்த்து செயல்பட வேண்டும் என்றும், அப்போது டிரம்ப் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதேபோன்று ஜெர்மனியில் நடைபெற்ற மாகாண தேர்தல்களில் அந்நாட்டு அதிபர் அங்கேலா மெர்க்கெல் கட்சி வெற்றி பெற்றது. அவருக்கும் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. 

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் பிரதமர் மோடியுடன் அவர் மூன்றாவது முறையாக தொலைபேசியில் பேசி ஆலோசித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story