டெல்லி மாநகராட்சி தேர்தல், வாக்கு எண்ணிக்கையில் பா.ஜனதா முன்னிலை, ஆம் ஆத்மிக்கு 3-வது இடம்


டெல்லி மாநகராட்சி தேர்தல், வாக்கு எண்ணிக்கையில் பா.ஜனதா முன்னிலை, ஆம் ஆத்மிக்கு 3-வது இடம்
x
தினத்தந்தி 26 April 2017 3:26 AM GMT (Updated: 26 April 2017 3:25 AM GMT)

டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜனதா முன்னிலை பெற்று உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.


புதுடெல்லி,


டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. அங்கு ஒரே மாநகராட்சியாக இருந்த டெல்லி மாநகராட்சி, கடந்த 2012-ம் ஆண்டு, வடக்கு மாநகராட்சி, தெற்கு மாநகராட்சி, கிழக்கு மாநகராட்சி என 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டது. 
இந்நிலையில், இந்த 3 மாநகராட்சிகளுக்கும் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்த வார்டுகள் எண்ணிக்கை 272. இவற்றில் 2 வார்டுகளில் வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், 270 வார்டுகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. பா.ஜனதா, 267 வார்டுகளில் புதுமுகங்களை வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது. தங்களுக்கு 200 வார்டுகளுக்கு மேல் வெற்றி கிடைக்கும் என்று அக்கட்சி நம்பிக்கை தெரிவித்தது. 

ஆம் ஆத்மி கட்சி, எல்லா வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. காங்கிரஸ் கட்சி 271 வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த கட்சிகளும் 200 வார்டுகளுக்கு மேல் கைப்பற்றுவோம் என்று கூறி வருகின்றன. பகுஜன் சமாஜ் கட்சி, ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. இருப்பினும், பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. 54 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் பா.ஜனதாவுக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டது. 

பா.ஜனதா முன்னிலை 

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது, காலை நிலவரப்படி பா.ஜனதா முன்னிலை பெற்று உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. பாரதீய ஜனதா கட்சி 151 வார்டுகளில் முன்னிலை பெற்று உள்ளது. காங்கிரஸ் கட்சி 45 வார்டுகளிலும், ஆம் ஆத்மி கட்சி 22 வார்டுகளிலும் முன்னிலை பெற்று உள்ளது. காலை நிலவரப்படி பா.ஜனதா மாபெரும் வெற்றியை நோக்கி பயணிக்கிறது.


Next Story