மராட்டிய மாநிலத்தில் ஆற்றுக்குள் பயிற்சி விமானம் விழுந்து பெண் உள்பட 2 பேர் பலி


மராட்டிய மாநிலத்தில் ஆற்றுக்குள் பயிற்சி விமானம் விழுந்து பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 26 April 2017 1:41 PM GMT (Updated: 26 April 2017 1:40 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் ஆற்றுக்குள் பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட 2 பேர் பலியாகினர்.

மும்பை, 

மராட்டிய மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் தேசிய விமான பயிற்சி மற்றும் மேலாண்மை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் விமான பணிகளுக்கான கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் பயிற்சியாளர் ராஜன் குப்தா மற்றும் பயிற்சி மாணவி சிவாணி ஆகியோர் கோண்டியாவில் உள்ள பிர்சி விமானநிலையத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றனர்.

இந்த விமானம் மஹல்கோவா-தியோரி அருகே உள்ள வெயின்கங்கா ஆற்றுக்கு மேலே நாடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக திடீரென விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் விழுந்தது. இந்த கோரவிபத்தில் விமானத்தில் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதுபற்றிய தகவல் கிடைத்தும் மீட்புபடையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 

Next Story