பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 17-ந்தேதி தொடக்கம்


பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 17-ந்தேதி தொடக்கம்
x
தினத்தந்தி 25 Jun 2017 12:00 AM GMT (Updated: 24 Jun 2017 9:05 PM GMT)

பாராளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஜூலை) 17-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடக்கிறது.

புதுடெல்லி, 

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஜூலை மாத இறுதியில் தொடங்கி ஆகஸ்டு இறுதி வரை நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெற இருப்பதால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே தொடங்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

இது குறித்து உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பாராளுமன்ற விவகாரங்களுக்கான கேபினட் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தனர். நேற்று முன்தினம் நடந்த பா.ஜனதாவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தின் வேட்புமனு தாக்கலுக்குப்பின் இந்த குழுவினர் மீண்டும் கூடி விவாதித்தனர்.

ஜனாதிபதி தேர்தல்

இதில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான தேதிகள் இறுதி செய்யப்பட்டன. அதன்படி ஜூலை 17-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது.

இதன் முதல் நாளான ஜூலை 17-ந்தேதி மறைந்த எம்.பி.க்களான வினோத் கன்னா, பல்லவி ரெட்டி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதனால் அன்று எந்தவித விவாதமும் நடைபெறாது என தெரிகிறது.

ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17-ந்தேதி நடைபெறும் நிலையில் அன்றைய தினமே மழைக்கால கூட்டத்தொடரும் தொடங்குவது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்கிறார்கள். 

Next Story