தமிழ்நாட்டில் மருத்துவ கலந்தாய்வுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை


தமிழ்நாட்டில் மருத்துவ கலந்தாய்வுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை
x
தினத்தந்தி 17 Aug 2017 11:30 PM GMT (Updated: 17 Aug 2017 9:07 PM GMT)

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை நடத்த தடை விதித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு, மாணவர்கள் தேர்ச்சி பற்றிய விவரங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருக்கிறது.

புதுடெல்லி, 

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையை ‘நீட்’ தேர்வின் அடிப்படையில்தான் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு முடிவு வெளியானது. ஆனால் நீட் தேர்வுக்கு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

இதற்கிடையே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சிலர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான தகுதி பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், கலந்தாய்வை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

விசாரணை

இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்தவழக்கில் மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக தான் ஆஜரானதாக தெரிவித்தார்.

துஷார் மேத்தா தன்னுடைய வாதத்தின் போது, இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு கோரும் அவசர சட்டத்தை தமிழக அரசு மத்திய அரசுக்கு தாக்கல் செய்துள்ளது என்றும், இதுதொடர்பாக சட்ட அமைச்சகம் தன்னுடைய ஒப்புதலை உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்து இருப்பதாகவும் கூறினார்.

மாணவர்களுக்கு பாதிப்பு

அப்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் நளினி சிதம்பரம் குறுக்கிட்டு, இந்த அவசர சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும், சட்டத்துக்கு புறம்பான முறையில் குறுக்கு வழியில் தமிழக அரசு இந்த அவசர சட்டத்தை பிறப்பிக்க முயற்சிக்கிறது என்றும், இது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

இதற்கு துஷார் மேத்தா பதில் அளித்து வாதாடுகையில் கூறியதாவது:-

அவசர சட்டம் ஏன்?

இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விகாஸ் சிங் தன்னுடைய வாதத்தின் போது, “தமிழக அரசுக்கு ஒரு வருட காலம் அவகாசம் இருந்தது. அப்போது அவர்கள் எதுவும் செய்யாமல் இப்போது அவசரமாக அவசர சட்டம் என்று ஒன்றை பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன? இது சற்றும் நியாயமற்ற செயலாகும். பல மாநிலங்களில் மாணவர் சேர்க்கை இரண்டு சுற்று முடிவடைந்துள்ளது. தமிழக அரசின் செயல் சட்டத்தை மீறுவதாக உள்ளது” என்றார்.

இதைத்தொடர்ந்து, நளினி சிதம்பரம் கூறியதாவது:-

தமிழக அரசின் நடவடிக்கை அரசியல் சட்டத்தை அவமதிக்கும் செயலாக அமைந்துள்ளது. தேவையான போது தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் நாங்கள் அவசர சட்டத்தை பிறப்பிக்கப்போகிறோம். அதனால் எங்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறுவது தவறான செயலாகும். இதற்கு முன்பு மாநில பாடதிட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்கிறோம் என்று அரசாணை வெளியிட்டார்கள். அதை நீதிமன்றம் ரத்துசெய்து விட்டது. இப்போது மாநில பாடதிட்டத்தில் பயின்ற மாணவர்களின் நலனுக்காக இந்த அவசர சட்டத்தை கொண்டு வருகிறோம் என்று தமிழக அரசு கூறுகிறது. இது சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கும், நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கும் அநீதி இழைக்கும் செயலாகும்.

இவ்வாறு நளினி சிதம்பரம் கூறினார்.

அதிகாரம் இல்லை

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.யு.சிங் வாதாடுகையில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 3,000 மாணவர்கள் மாநில பாடதிட்டத்தில் பயின்றவர்கள். தற்போது மீண்டும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட்டால் ஏற்கனவே நீட் தேர்வில் தகுதி பெற்ற இந்த மாணவர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வகையில் அவசர சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே தமிழக அரசு உடனடியாக நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கைக்கான தகுதி பட்டியலை வெளியிட வேண்டும். தமிழக அரசு ஏதேனும் காரணம் காட்டி மாணவர் சேர்க்கையை தாமதப்படுத்துவது நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல்.

இவ்வாறு அவர் கூறினார்.

நீதிபதி கேள்வி

மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி வாதாடுகையில், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள். அவர்கள் பிளஸ்-2 வகுப்பில் பயின்ற பாடத்திட்டம் முற்றிலும் வேறானது. அவசரப்பட்டு எடுக்கும் எந்த முடிவாலும் இந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்” என்றார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே வாதாடுகையில், “ஒரு மாநில அரசு பிறப்பிக்கும் அவசர சட்டத்துக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது. அவசர சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. மாணவர்களின் நலன் கருதி பிறப்பிக்கப்படும் இந்த அவசர சட்டம் அனைத்து வகையிலும் செல்லும்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா, “அவசர சட்டம் ஏன் இத்தனை கடுமையாக எதிர்க்கப்படுகிறது? இதனால் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

கிராமப்புற மாணவர்கள்

அதற்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் வக்கீல் விகாஸ் சிங், “இந்த அவசர சட்டத்தினால் நீட் தேர்வின் அடிப்படையில் தகுதி பட்டியல் தயாரிக்கப்பட மாட்டாது. பிளஸ்-2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான் தகுதி பட்டியல் தயாரிக்கப்படும். இதுதான் இந்த அவசர சட்டத்தின் அவலம்” என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய சேகர் நாப்டே, “சிலருக்கு சில சட்டங்கள் தவறானதாக தோன்றலாம். ஆனால் அதற்காக ஒரு மாநில அரசு சட்டமே இயற்றக் கூடாது என்று யாரும் கூறமுடியாது” என்றார். மேலும் கிராமப்புறங்களில் இருந்து 5 லட்சம் மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதி இருக்கிறார்கள் என்ற தகவலையும் அவர் தெரிவித்தார்.

அவரது கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் வாதிட்ட நளினி சிதம்பரம், நீட் தேர்வு எழுதிய 35,000 மாணவர்களில் வெறும் 250 பேர் மட்டுமே கிராமப்புறங்களில் இருந்து வந்திருக்கிறார்கள் என்றார்.

இதற்கு சேகர் நாப்டே, கிராமப்புறங்களைச் சேர்ந்த 4 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா, “உங்கள் வாதத்தை நாங்கள் ஏற்றாலும், அவசர சட்டத்துக்கான அவசியம் இப்போது என்ன? மாணவர்களின் நலன் கருதி முன்பே ஏன் நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த சேகர் நாப்டே, “மாநில அரசு இயற்றும் எந்த சட்டத்தையும் இப்போது ஏன் இயற்றப்படுகிறது என்று கேட்க முடியாது. மாநில பாடதிட்டத்தில் பயின்ற கிராமப்புறங்களை சேர்ந்த 4 லட்சம் மாணவர்களின் நலன் கருதி ஏதாவது செய்தாக வேண்டும் என்று மாநில அரசு இப்போது கருதுகிறது. இதில் தவறு என்ன இருக்க முடியும்?” என்றார்.

கலந்தாய்வுக்கு தடை

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், “மாநில அரசு மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்துவது சரிதான் என்ற போதிலும் அதற்காக நீட் தேர்வை ஒரேயடியாக ஒதுக்க முடியாது. உங்கள் அவசர சட்டத்தினால் நீட் தேர்வு எழுதி தேர்வான மாணவர்களும் பாதிக்கப்படுவார்களே. இரு தரப்பு மாணவர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்கள்.

பின்னர் அவர்கள் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த தடை விதித்தனர். “எந்த மாணவரும் பாதிப்பு அடையக்கூடாது என்பதில் கோர்ட்டு கவனம் செலுத்துகிறது. தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு மத்திய அரசு விரையில் ஒப்புதல் அளிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, இந்த வழக்கு வருகிற செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அப்போது மத்திய அரசும் ஒரு தரப்பாக விசாரணையில் ஆஜராக வேண்டும். செவ்வாய்க் கிழமை வரை தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை எதுவும் நடைபெறக்கூடாது” என்று அப்போது கூறினார்கள்.

தமிழக அரசுக்கு உத்தரவு

அத்துடன், தமிழ்நாட்டில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, மாநில பாடதிட்டத்தில் பயின்றவர்கள் எண்ணிக்கை, சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்தில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை, கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்த பட்டியல் ஒன்றை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை மற்றும் கலந்தாய்வில் சமமான வாய்ப்பு வழங்கும் வகையில் இடங்களை எப்படி சமமாக பிரிப்பது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவு பிறப்பித்தனர். 

Next Story