டெல்லியில் தமிழக விவசாயிகள் யாகம் வளர்த்து போராட்டம்


டெல்லியில் தமிழக விவசாயிகள் யாகம் வளர்த்து போராட்டம்
x
தினத்தந்தி 20 Aug 2017 11:15 PM GMT (Updated: 20 Aug 2017 10:25 PM GMT)

டெல்லியில் தமிழக விவசாயிகள் நேற்று யாகம் வளர்த்து போராட்டம் நடத்தினார்கள்.

புதுடெல்லி,

டெல்லியில் தமிழக விவசாயிகள் நேற்று யாகம் வளர்த்து போராட்டம் நடத்தினார்கள்.

36-வது நாளாக நீடிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, விவசாய கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் சுமார் 40 பேர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த போராட்டம் நேற்று 36-வது நாளாக நடந்தது. ஒவ்வொரு நாளும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விதவிதமான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

யாகம் வளர்த்து போராட்டம்

அந்த வகையில் நேற்று விவசாயிகள் யாகம் வளர்த்து போராட்டம் நடத்தினார்கள்.

இதற்காக போராட்ட களத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டது. அதில் யாகத்துக்கான அனைத்து வகையான பொருட்களை போட்டு, நெய் ஊற்றி யாகத்தீ வளர்த்து வேதங்கள் ஓதப்பட்டது.

வேதம் தெரிந்த ஒருவர் வேத மந்திரங்கள் சொல்ல, விவசாயிகளும் அதை திரும்ப உரைத்தனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷமிட்டனர்.

ஜந்தர் மந்தர் சாலை வழியாக சென்றவர்கள் விவசாயிகளின் இந்த போராட்டத்தை அருகில் வந்து பார்த்து சென்றனர்.

இதுகுறித்து போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், ‘விவசாயம் பற்றியும், தமிழக விவசாயிகளின் நிலை பற்றியும் கவனத்தில் கொள்ள பிரதமர் மோடிக்கு ஆண்டவன் நல்ல எண்ணத்தை கொடுக்க வேண்டும் என்று வேண்டியே இந்த யாகத்தை இங்கு நடத்துகிறோம்’ என்றார்.

ஆதரவு

முன்னதாக தேசிய அருந்ததியர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் தலித் பாண்டியன் தலைமையில் அந்த அமைப்பினர் சிலர் அங்கு வந்து, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Next Story