‘இந்திய வரலாற்றின் களங்கம், தாஜ்மகால்’ பா.ஜனதா எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை


‘இந்திய வரலாற்றின் களங்கம், தாஜ்மகால்’ பா.ஜனதா எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை
x
தினத்தந்தி 16 Oct 2017 11:00 PM GMT (Updated: 16 Oct 2017 8:51 PM GMT)

தாஜ்மகால், துரோகிகளால் கட்டப்பட்டது எனவும், அது இந்திய வரலாற்றின் களங்கம் என்றும் உத்தரபிரதேச பா.ஜனதா எம்.எல்.ஏ. கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மீரட்,

காதலின் சின்னமாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் விளங்கி வரும் தாஜ்மகால் உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் அமைந்துள்ளது. சமீபத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு வெளியிட்ட உத்தரபிரதேச சுற்றுலா தலங்கள் பட்டியலில் தாஜ்மகால் இடம்பெறவில்லை. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தாஜ்மகால் பற்றி பல்வேறு வெறுப்புக்கருத்துக்களை மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான சங்கீத் சோம் கூறியுள்ளார். சிசோலி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக கூறுகையில், ‘தாஜ்மகாலுக்கு இந்திய வரலாற்றில் இடம் அளிக்கக்கூடாது. ஏனெனில் அது துரோகிகளால் கட்டப்பட்டது. அது இந்திய வரலாற்றின் களங்கம் என்றார்.

தாஜ்மகாலை கட்டிய மனிதர் (ஷாஜகான்) தனது தந்தையை இறுதிவரை சிறையில் அடைத்து இருந்ததாகவும், அவர் இந்துக்களை ஒழிக்க விரும்பியதாகவும் கூறிய சங்கீத் சோம், இப்படிப்பட்டவர்களுக்கு நமது வரலாற்றில் இடம் அளித்தால், அது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். எனவே இந்த வரலாற்றை நாம் மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சங்கீத் சோமின் இந்த கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இவர் கடந்த காலங்களிலும் பல்வேறு மதரீதியான கருத்துகளை கூறி சர்ச்சைகளில் சிக்கியிருந்தார்.

ஆனால் தாஜ்மகால் குறித்து சங்கீத் சோம் கூறியவை அனைத்தும் அவரது சொந்த கருத்துகள் என்றும், இதற்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் பா.ஜனதா கூறியுள்ளது.

சங்கீத் சோமின் கருத்துகளுக்கு ஐதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் கட்சித்தலைவருமான ஒவைசி பதிலடி அளித்து உள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘டெல்லி செங்கோட்டையையும் ‘துரோகிகள்’தான் கட்டியுள்ளனர். அப்படியானால் அங்கே மூவர்ண கொடியேற்றுவதை மோடி நிறுத்துவாரா? உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாஜ்மகாலுக்கு செல்லக்கூடாது என மோடி அல்லது ஆதித்யநாத்தால் கூற முடியுமா?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

டெல்லியில் வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் ஐதராபாத் இல்லமும் துரோகிகளால் கட்டப்பட்டதுதான் என்று கூறியுள்ள மஜ்லிஸ், அப்படியானால் வெளிநாட்டு விருந்தினர்களை அங்கே வரவேற்பதை மோடி விட்டுவிடுவாரா? என்றும் வினா தொடுத்துள்ளார்.

இதற்கிடையே சங்கீத் சோமின் கருத்துகள் தொடர்பாக பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரியும், தேசிய மாநாடு கட்சியின் செயல் தலைவருமான ஒமர் அப்துல்லா மறைமுகமாக சாடியுள்ளார்.

அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில் ‘இனிமேல் செங்கோட்டையில் இருந்து சுதந்திரதின உரை வெளியாகாதா? சுதந்திர தினத்தன்று நேரு மைதானத்தில் இருந்து பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். இது சில இதயங்களை மட்டில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.


Next Story