மம்தா பானர்ஜிக்கு வெற்றி: மத்திய அரசு படைகளை திரும்பபெற ஐகோர்ட்டு இடைக்கால தடை


மம்தா பானர்ஜிக்கு வெற்றி: மத்திய அரசு படைகளை திரும்பபெற ஐகோர்ட்டு இடைக்கால தடை
x
தினத்தந்தி 17 Oct 2017 1:36 PM GMT (Updated: 17 Oct 2017 1:36 PM GMT)

டார்ஜிலிங் மலைப் பகுதியில் இருந்து மத்திய பாதுகாப்பு படைகளை திரும்ப பெறும் மத்திய அரசு திட்டத்திற்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளை பிரித்து கூர்காலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்கக்கோரி பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணியான கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜி.ஜே.எம்.) அமைப்பினர் கடந்த ஜூலையில் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதுடன், அங்கு அடிக்கடி வன்முறையும் வெடித்து வருகிறது. வன்முறையின் போது போலீசார் மற்றும் பொதுமக்கள் உள்பட 13 பேர் பலியாகினர். 4 மாதங்களாக பெரும்பாலான பகுதிகள் முடங்கியே காணப்படுறது. இப்பகுதிகளில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை நிலை நிறுத்தப்பட்டு அமைதி நிலை கொண்டு வரப்பட்டது.

இப்போது அங்கு அமை திரும்பிவிட்டதால் 15 படை பிரிவுகளில் 10 பிரிவுகளை திரும்ப பெற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இமாச்சல பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலுக்கு பாதுகாப்புக்கு படை பிரிவுகள் தேவையாக உள்ளது என தெரிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவை அடுத்து மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, “மத்திய அரசின் முடிவானது துரதிஷ்டவசமானது, நெறிமுறையற்றது, ஜனநாயகமற்றது மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது,” என்றார். இந்நிலையில் மத்திய அரசு 7 படை பிரிவுகளை திரும்ப அழைக்க முன்வந்தது. ஒவ்வொரு படை பிரிவிலும் 100 சிஆர்பிஎப் வீரர்கள் இடம்பெறுவார்கள். 

டிசம்பர் 25 வரையில் படையை நிலைநிறுத்த கோரிக்கை விடுத்து மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது, ஆனால் 10 படை பிரிவுகளை திரும்ப பெற உள்ளதாக மத்திய அரசு கூறியது. 

இவ்விவகாரம் தொடர்பாக மேற்கு வங்காள மாநில அரசு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி தன்டோன், படைகளை திரும்ப பெறுவதற்கு மத்திய அரசு போதுமான காரணங்களை குறிப்பிடவில்லை என கூறி, முடிவுக்கு இடைக்கால தடை விதித்தது.

வன்முறை வெடித்த பகுதியில் நிலையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய படைகளை நிலை நிறுத்த அரசுக்கு ஏற்கனவே சுப்ரீம் கோட்டு உத்தரவிட்டு இருந்தது, இதனையடும் நீதிபதி சுட்டிக்காட்டி உள்ளார். இவ்விவகாரத்தில் மாநில அரசின் மனு குறித்து அக்டோபர் 23-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் விடுக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மாநில அரசு அரசும் மத்திய அரசின் அபிடவிட்டிற்கு பதிலை 26-ம் தேதிக்கு தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது. மாநில அரசு டார்ஜிலிங் மலைப்பகுதியில் அமைதியை திரும்ப கொண்டுவர நடவடிக்கையை எடுத்துவருவதாகவும், இப்போது படைகளை திரும்ப பெற்ற நடைபெறும் அனைத்து பணிகளும் பாதிப்புக்கு உள்ளாகும் என மாநில அரசு வாதிட்டது. அக்டோபர் 27-ம் தேதி வரையில் மத்திய படைகளை வாபஸ் பெறக்கூடாது எனவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்ததும் ஐகோர்ட்டின் வழக்கமான பெஞ்ச்க்கு செல்லுமாறு மாநில அரசை கேட்டு கொண்டு உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவு மம்தா பானர்ஜி அரசுக்கு கிடைத்த உதவியாக அமைந்து உள்ளது.

Next Story