டெல்லியில் காற்றின் தரம் உயர்ந்தது, கட்டுமானங்களுக்கு விதிக்கபட்ட தடை நீக்கம்


டெல்லியில் காற்றின் தரம் உயர்ந்தது, கட்டுமானங்களுக்கு விதிக்கபட்ட தடை நீக்கம்
x
தினத்தந்தி 17 Nov 2017 7:26 AM GMT (Updated: 17 Nov 2017 7:25 AM GMT)

டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டதையடுத்து கட்டுமானங்களுக்கு விதிக்கபட்ட தடை நீக்குவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் ஒரு வாரத்திற்கு முன்பு காற்றில் மாசு மிகவும் மோசமான நிலையில் இருந்தது. டெல்லியிலும், தேசியத் தலைநகர் வலையத்திலும் பனிமூட்டத்துடன் நச்சுப் புகையும் சேர்ந்து காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் மூச்சுவிடுவதற்கு சிரமமடைந்தனர். கண்ணில் நீர்வழிதல், எரிச்சல் போன்ற பாதிப்புகளுக்கும் உள்ளாகினர்.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசு தடுப்பு, கட்டுப்பாடு ஆணையம் பல்வேறு அவசரகால நடவடிக்கைகளை அறிவித்தது.
குறிப்பாக கட்டுமானங்களுக்கும், நகரில் லாரிகள் நுழைவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டது.அதேபோன்று, நகரில் வாகன நிறுத்துமிடக் கட்டணங்களை அதிகரிக்கவும் அறிவுறுத்தியது. இந்த நிலையில், டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதையடுத்து, கட்டுமானங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

அதேபோல், தொழில்துறை மற்றும் பயிர்க்கழிவுகளை எரிப்பது போன்றவற்றிற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் . லாரிகள் டெல்லிக்குள் நுழைய விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டது. ஆனால், இதை முறையாக ஒழுங்குபடுத்தவேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மேலும் அண்டை மாநிலங்கள், இரண்டு வாரங்களுக்குள் காற்று மாசை குறைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. 

Next Story