இரட்டை ஆதாய பதவி விவகாரம் கெஜ்ரிவால் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் பதவி பறிப்பு?


இரட்டை ஆதாய பதவி விவகாரம் கெஜ்ரிவால் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் பதவி பறிப்பு?
x
தினத்தந்தி 19 Jan 2018 11:15 PM GMT (Updated: 19 Jan 2018 8:18 PM GMT)

கெஜ்ரிவால் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் பதவியைப் பறிக்க ஜனாதிபதிக்கு தேர்தல் கமிஷன் சிபாரிசு செய்தது. #Kejriwal #delhi

புதுடெல்லி,

டெல்லியில் 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அரவிந்த் கெஜ்ரிவால், முதல்-மந்திரி ஆனார்.

அதைத் தொடர்ந்து மார்ச் 13-ந் தேதி, ஆளுங்கட்சியின் 21 எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகளின் பாராளுமன்ற செயலர்களாக நியமிக்கப்பட்டனர். இதற்கு எதிராக காங்கிரசும், பாரதீய ஜனதாவும் போர்க்கொடி தூக்கின. இதனால் இரட்டை ஆதாய பதவி என்ற அடிப்படையில் அவர்களது பதவி பறிபோகும் ஆபத்து எழுந்தது.

ஜனாதிபதிக்கு மனு

டெல்லி ஐகோர்ட்டில் ராஷ்ட்ரீய முக்தி மோர்ச்சா என்ற அமைப்பு வழக்கு தொடுத்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பில், கவர்னரின் ஒப்புதலை பெறாமல் 21 எம்.எல்.ஏ.க்களை மந்திரிகளின் பாராளுமன்ற செயலர்களாக நியமித்தது செல்லாது என கூறி, அவர்களது நியமனம் ரத்து செய்யப்பட்டது.

இரட்டை பதவி வகித்ததால், 21 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க வேண்டும் என்று கோரி பிரசாந்த் பட்டேல் என்ற வக்கீல், ஜனாதிபதிக்கு மனு தாக்கல் செய்தார். அதை ஜனாதிபதி, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பிவைத்தார். காங்கிரஸ் கட்சியும் தேர்தல் கமிஷனில் முறையிட்டது.

தேர்தல் கமிஷன் விசாரணை

இதை தேர்தல் கமிஷன் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நிலையில், ஜர்னைல் சிங் என்ற எம்.எல்.ஏ., பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

அதைத் தொடர்ந்து மீதி 20 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பு விவகாரத்தை தேர்தல் கமிஷன் விசாரித்து வந்தது.

இதற்கிடையே டெல்லி அரசு, இரட்டை ஆதாய பதவி வரம்பில் இருந்து, பாராளுமன்ற செயலர் பதவிக்கு விலக்கு அளித்து சட்டம் இயற்றியது. ஆனால் அந்த சட்டத்துக்கு அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்கவில்லை.

தேர்தல் கமிஷன் முடிவு

20 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு விவகாரத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி தேர்தல் கமிஷன் விசாரணையை முடித்தது. முடிவை ஒத்தி வைத்தது.

இந்த நிலையில் தேர்தல் கமிஷன் நேற்று கூடி, இதில் முடிவு எடுத்ததாகவும், 20 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

பதவி விலக வலியுறுத்தல்

இதையடுத்து டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான், “முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பதவியில் தொடர்வதற்கு உரிமை இல்லை, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

“இது தார்மீக அடிப்படையில் மிகப்பெரிய தோல்வி என்பதால், கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும்” என்று பாரதீய ஜனதா தலைவர் விஜேந்தர் குப்தாவும் கருத்து தெரிவித்தார்.

ஆம் ஆத்மி சாடல்

ஆனால் தேர்தல் கமிஷன் முடிவை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக சாடி உள்ளது.

இதுபற்றி அந்த கட்சியின் மூத்த தலைவர் அசுதோஷ் டுவிட்டரில், “இந்த அளவுக்கு தேர்தல் கமிஷன் தரம் குறைந்து போனது கிடையாது. பிரதமர் அலுவலகத்தின் அஞ்சல் பெட்டியாக தேர்தல் கமிஷன் இருக்கக்கூடாது. ஆனால் அதுதான் இன்றைய நடப்பாகி விட்டது” என கூறி உள்ளார்.

ஐகோர்ட்டு மறுப்பு

தேர்தல் கமிஷன் முடிவுக்கு எதிராக உடனடியாக டெல்லி ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு தாக்கல் செய்தது. அந்த கட்சியின் 7 எம்.எல்.ஏ.க்கள் தொடுத்த வழக்கை தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல் அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

ஆனால் தேர்தல் கமிஷனின் முடிவுக்கு இடைக்கால தடை பிறப்பிக்க அது மறுத்துவிட்டது.

தேர்தல் கமிஷன் பரிந்துரையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்று, அறிவிப்பு வெளியானதும் 20 இடங்களுக்கு இடைத்தேர்தல் வரும்.

20 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்கப்பட்டாலும், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக்கு ஆபத்து இல்லை. அதன் பலம் மட்டும்தான் 46 ஆக குறையும். 

Next Story