பணியில் உயிரிழக்கும் பாராமிலிட்டரி படை குடும்பத்திற்காக கீதம் வெளியிட்டார் ராஜ்நாத் சிங்


பணியில் உயிரிழக்கும் பாராமிலிட்டரி படை குடும்பத்திற்காக கீதம் வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 20 Jan 2018 11:36 AM GMT (Updated: 20 Jan 2018 12:10 PM GMT)

நாட்டை பாதுகாக்கும் பணியில் உயிரிழக்கும் பாராமிலிட்டரி படையினரின் குடும்பத்திற்கு உதவும் வகையில் கீதம் ஒன்றை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இன்று வெளியிட்டார்.

புதுடெல்லி,

நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு தனது இன்னுயிரை இழக்கும் பாராமிலிட்டரி படையினரின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக பாரத் கே வீர் என்ற திட்டம் தொடங்கப்பட்டது.  இதன் ஒரு பகுதியாக கீதம் ஒன்று இன்று வெளியிடப்பட்டது.  இதனை பாடகர் கைலாஷ் கேர் பாடி, இசையமைத்துள்ளார்.  இதற்கான நிகழ்ச்சி புதுடெல்லியில் இன்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.  அவருடன் மத்திய மந்திரிகள் கிரெண் ரிஜிஜு, ஹன்ஸ்ராஜ் ஆஹிர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா மற்றும் இந்தி திரைப்பட நடிகர் அக்ஷய் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கீதத்தினை இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கிடைக்கும் பணம் இத்திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும்.

நடிகர் அக்ஷய் குமார், இசையமைப்பாளர் கைலாஷ் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் அளித்த நிதியென ரூ.12.93 கோடி வரை இந்நிகழ்ச்சியின் வழியே திரட்டப்பட்டது.  நிகழ்ச்சியில் மத்திய ஆயுத போலீஸ் படையினரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், நாட்டின் அமைதியை காக்க வீரர்கள் தங்களது வாழ்வை பணயம் வைக்கின்றனர்.  உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நாம் செய்யும் உதவி என்பது எப்பொழுதும் குறைவே.  ஒரு மனிதரின் வாழ்க்கையை பணத்துடன் நாம் ஒப்பிட முடியாது என கூறினார்.

இத்திட்டத்தின் பிரசார தூதுவரான நடிகர் அக்ஷய் குமார், போரில் உறுப்புகளை இழக்கும் வீரர்களின் நலனிற்காகவும் இதுபோன்ற திட்டத்தினை தொடங்கும்படி மத்திய மந்திரி சிங்கிடம் கேட்டு கொண்டார்.

#Delhi #RajnathSingh #AkshayKumar #Homeminister


Next Story