'முக்தர் அன்சாரி உயிரிழந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை தேவை' - மாயாவதி வலியுறுத்தல்


முக்தர் அன்சாரி உயிரிழந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை தேவை - மாயாவதி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 March 2024 6:37 AM GMT (Updated: 29 March 2024 8:12 AM GMT)

சிறையில் முக்தர் அன்சாரி உயிரிழந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் முக்தர் அன்சாரி. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர், மவுசதார் தொகுதியில் போட்டியிட்டு ஐந்து முறை வெற்றி பெற்றவர். இவர் மீது 60-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

உத்தர பிரதேசத்தின் வெவ்வேறு நீதிமன்றங்களால் செப்டம்பர் 2022 முதல் எட்டு வழக்குகளில் அன்சாரிக்கு தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் பாண்டா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த முக்தார் அன்சாரி, மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.

முன்னதாக, சிறைக்குள் அவருக்கு விஷம் கலந்த உணவு வழங்கப்பட்டதாகவும், அதனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் அன்சாரியின் வழக்கறிஞர் குற்றம் சாட்டி இருந்தார். இந்த சூழலில், அவர் திடீரென உயிரிழந்துள்ளதால், மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் முக்தர் அன்சாரி உயிரிழந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "முக்தார் அன்சாரி சிறையில் உயிரிழந்தது தொடர்பாக அவரது குடும்பத்தினர் முன்வைத்துள்ள கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story