மக்கள் மனம் கவர்ந்த ‘ஏழிசை மன்னர்’


மக்கள் மனம் கவர்ந்த ‘ஏழிசை மன்னர்’
x
தினத்தந்தி 1 Nov 2018 5:46 AM GMT (Updated: 1 Nov 2018 5:46 AM GMT)

இன்று (நவம்பர் 1-ந் தேதி) நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் நினைவு தினம்.

தமிழ்த்திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜ பாகவதர், தமது வாழ்நாளில் நடித்த திரைப்படங்கள் வெறும் 14 தான். ஆயினும், 100 படங்களில் நடித்தவர்களுக்குக்கூட கிட்டாத புகழை அவர் பெற்றார்.

பாகவதரின் சொந்த ஊர் திருச்சி. பாகவதரின் தந்தை பெயர் கிருஷ்ணமூர்த்தி ஆசாரியார். தாயார் மாணிக்கத்தம்மாள். பாகவதர் 1-3-1910-ல் பிறந்தார்.

சிறு வயதிலேயே இசையில் அதிக நாட்டம் கொண்டிருந்த தியாகராஜன், அதிகம் படிக்கவில்லை. ஏழு வயதிலேயே மேடை ஏறி நடிக்கத் தொடங்கினார்.

பாகவதரின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், நாடக உலகில் அவர் பெரும் புகழ் பெற்றார். எந்த நாடகக் குழுவிலும் சேராமல் ஸ்பெஷல் நாடகங்களில் மட்டும் நடிக்கலானார்.

பாகவதரும், எஸ்.டி.சுப்புலட்சுமியும் நடித்த “பவளக்கொடி” நாடகத்தை அழ.இராம.அழகப்ப செட்டியார் என்ற செல்வந்தர் பார்த்தார். அந்த நாடகத்தை திரைப்படமாகத் தயாரிக்க விரும்பினார். இருவரையும் ஒப்பந்தம் செய்தார்.

இந்தப் படத்தின் டைரக்‌ஷன் பொறுப்பை கே.சுப்பிரமணியம் ஏற்றார். இவர் “பி.ஏ.,பி.எல்” பட்டம் பெற்று சில காலம் வக்கீலாகப் பணிபுரிந்தவர். அதன்பிறகு சினிமாவால் ஈர்க்கப்பட்டார்.பாகவதர், எஸ்.டி.சுப்புலட்சுமி, கே.சுப்பிரமணியம் ஆகிய மூவருக்கும் “பவளக்கொடி”தான் முதல் படம். பாடல்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்ட அந்த காலக்கட்டத்தில், “பவளக்கொடி”யில் 60 பாடல்கள் இடம் பெற்றிருந்தன.

“பவளக்கொடி”யில் பாகவதருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ.1000. எஸ்.டி.சுப்புலட்சுமியின் சம்பளம் ரூ.2000. டைரக்டர் கே.சுப்பிரமணியம் பெற்றது ரூ.750.

பாகவதரின் இரண்டாவது படம் “நவீன சாரங்கதரா.” இதில் அவருக்கு ஜோடி எஸ்.டி.சுப்புலட்சுமி. டைரக்‌ஷன் கே.சுப்பிரமணியம்.

இதன்பின், பாகவதர் சொந்தமாக “சத்திய சீலன்” என்ற படத்தைத் தயாரித்தார். படத்தின் மொத்த செலவே ரூ.52 ஆயிரம்தான்!

1937-ம் ஆண்டு, பாகவதர் நடிப்பில் “சிந்தாமணி”, “அம்பிகாபதி” ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்து, இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. “சிந்தாமணி” படத்தில் கிடைத்த லாபத்தைக்கொண்டு, மதுரை ராயல் டாக்கீசார் மதுரையில், “சிந்தாமணி” என்ற தியேட்டரையே கட்டினார்கள்.

பாகவதர் அடுத்தபடியாக “திருநீலகண்டர்” என்ற சொந்தப்படத்தை தயாரித்தார். படத்தின் டைரக்டர் கண்டிப்புக்கு பெயர் பெற்ற ராஜா சாண்டோ. படம் பெரிய வெற்றி பெற்றது. பாகவதர் நடிப்பில் நல்ல மெருகேறி இருந்தது.

“திருநீலகண்டர்” படத்தை அடுத்து மதுரை முருகன் டாக்கீசார் தயாரித்த “அசோக்குமார்” படத்தில் நடித்தார். இதில், பாகவதருடன் எம்.ஜி.ஆர். இணைந்து நடித்தார்.

இதை அடுத்து பாகவதர் நடித்த படம் “சிவகவி.” கோவை பட்சிராஜா தயாரிப்பான இதை, ஒரு திரைக்காவியம் என்றே சொல்லலாம். “வீணை” எஸ்.பாலசந்தரின் மூத்த சகோதரியான எஸ்.ஜெயலட்சுமி, பாகவதருக்கு ஜோடியாக நடித்தார். டி.ஆர்.ராஜகுமாரி வில்லியாக நடித்தார். இப்படம் பெரிய ஊர்களில் ஒரு வருடம் வரை ஓடியது.

1944 அக்டோபர் 16-ந்தேதி தீபாவளித் திருநாள். அன்று வெளிவந்த “ஹரிதாஸ்”, சென்னை பிராட்வே தியேட்டரில் 16-10-1944 முதல் 22-11-1946 வரை தொடர்ந்து 110 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது. பாகவதர் பாடிய புகழ் பெற்ற பாடல்களில் சில;

‘பூமியில் மானிட ஜென்மம்...’ (அசோக்குமார்) ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்து’, ‘வதனமே சந்த்ர பிம்பமோ...’(சிவகவி) ராதே உனக்கு கோபம் ஆகாதடி...’(சிந்தாமணி) ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ?...’ ‘கிருஷ்ணா முகுந்தா முராரே...’(ஹரிதாஸ்) “ஹரிதாஸ்” வெளிவந்த சில நாட்களுக்கு எல்லாம் பாகவதர் வாழ்க்கையில் சோதனை சூழ்ந்தது. சினிமா நட்சத்திரங்கள் பற்றி அவதூறாகவும், ஆபாசமாகவும் எழுதி வந்த “இந்து நேசன்” என்ற மஞ்சள் பத்திரிகையின் ஆசிரியர் லட்சுமிகாந்தன் 1944 நவம்பர் 9-ந் தேதி குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது நடந்த வழக்கில், இருவருக்கும் செசன்சு கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஐகோர்ட்டு அதை உறுதி செய்தது.

வெள்ளையர் ஆட்சியின்போது, உச்சநீதிமன்றம் (பிரிவி கவுன்சில்) லண்டனில் இருந்தது. அங்கு பாகவதரும், கிருஷ்ணனும் அப்பீல் செய்தனர். “சென்னை ஐகோர்ட்டு சரியாக விசாரிக்கவில்லை. மீண்டும் விசாரித்து, சரியான தீர்ப்பை வழங்கவேண்டும்” என்று, பிரிவி கவுன்சில் உத்தரவிட்டது.

அதன்படி, சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணை நடந்தது. பாகவதருக்கும், கிருஷ்ணனுக்கும் பிரபல வழக்கறிஞர் வி.எல்.எத்திராஜ் பார்-அட்-லா ஆஜரானார். ஆணித்தரமாக வாதாடி, பாகவதரும், கிருஷ்ணனும் குற்றமற்றவர்கள் என்று நிரூபித்தார். இருவரும் விடுதலை அடைந்தனர்.

பாகவதர் தன் அன்பின் அறிகுறியாக 100 பவுனில் ஒரு தங்கத்தட்டு செய்து, அதை எத்திராஜுக்கு வழங்கினார். “நீங்கள் எப்போதும் இதில்தான் சாப்பிடவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அதன்படியே, எத்திராஜும் வாழ்நாள் முழுவதும் அந்த தட்டில்தான் சாப்பிட்டு வந்தார்.

பாகவதர் தண்ணீரில் பன்னீர் கலந்து குளிப்பார் என்பது போல அந்தக்காலத்தில் வதந்திகள் இருந்தன. அவற்றில் கற்பனைதான் அதிகம் என்றாலும் அவர் தன்னை அலங்கரித்துக்கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டினார். கைகளில் வைர மோதிரங்கள், காதுகளில் வைரக்கடுக்கன், பட்டுச்சட்டை, பட்டுவேட்டி, பாக்கெட்டில் தங்கப்பேனா, நெற்றியில் ஜவ்வாதுப்பொட்டு. இந்த அலங்காரங்களுடன் பாகவதரைப் பார்த்தவர்களின் கண்களுக்கு அவர் தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்த கந்தர்வன் போலத் தோன்றியதில் வியப்பில்லை.

திருநீலகண்டர் வெற்றி விழாவில் கலந்து கொண்ட பாகவதரிடம், காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி “இனி பட்டுச்சட்டை, பட்டு வேட்டி அணிவதை விட்டுவிடுங்கள். கதர் துணி அணியுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார். அன்று முதல் பாகவதர் கதர் அணிய தொடங்கினார்.

பாகவதர் வறுமையில் வாடினார், பஸ்சில் பயணம் செய்தார் என்றெல்லாம் அவர் மறைவுக்குப்பிறகு சிலர் எழுதினர். லட்சுமிகாந்தன் கொலை வழக்கு காரணமாக சொத்துக்களை இழந்தார் என்றாலும் யாரிடமும் கையேந்தவில்லை. தன்மானத்துடன் வாழ்ந்தார். நடிகர் டி.ஆர்.மகாலிங்கம் தன் மகன் சுகுமாரனைப் பள்ளியில் சேர்க்கும்போது ஒரு விழா நடத்தினார். அதில் பாகவதர் ஒரு கச்சேரி செய்தார். பாகவதருக்கு உதவவேண்டுமென்று விரும்பிய மகாலிங்கம் ஆயிரம் ரூபாய் கொண்ட கவரை பாகவதருக்கு வழங்கினார். (இது இக்காலத்து ஒரு லட்சத்துக்கு சமம்)

பாகவதர், சுகுமாரனைத் தன் அருகே அழைத்தார். மகாலிங்கம் கொடுத்த ஆயிரம் ரூபாயுடன் ஒரு ரூபாயைச் சேர்த்து இதை வைத்துக்கொள். இப்போது என்னால் முடிந்தது இதுதான். நன்றாக படித்து முன்னேறு என்று ஆசி கூறினார். தமிழ்நாட்டின் தலைசிறந்த இசை விமர்சகர் சுப்புடு கூறும்போது, பாகவதருடைய பாட்டை கேட்டுவிட்டு இப்போது திரைப்படங்களில் வரும் அவல ஒலங்களைக் கேட்கும்போது உள்ளம் வேதனையடைகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகவதர் பற்றி எம்.ஜி.ஆர். கூறுகிறார்:-

ஒரு கச்சேரியில் இசைச்சித்தர் சிதம்பரம் பாடிக்கொண்டிருந்தார். திடீரென கூட்டத்தினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. கைத்தட்டல் ஒலித்தது. ஆமாம். பாகவதர் கூட்டத்தின் ஒருபுறத்தில் வந்து கொண்டிருந்தார். அவரைச்சுற்றி ஒளி வீசிக்கொண்டிருந்ததாக உணர்ந்தேன். மேடை அருகில் அவருக்கென நாற்காலி போடப்பட்டது. ஜெயராமன் தொடர்ந்து பாடிக்கொண்டு இருந்தார். பாகவதர் எங்கெல்லாம் தலை ஆட்டினாரோ, ரசித்தாரோ அங்கெல்லாம் மக்களும் தலையாட்டினார்கள்.

இரண்டொரு பாடல்களைக் கேட்டு ரசித்த பிறகு மக்கள் நெருக்கடியிலிருந்து தப்பிச் செல்வதற்காக பாகவதர் எழுந்து சென்றார். நான் அப்போது என்ன நினைத்தேனோ, அதை அப்படியே எழுதுகிறேன்.

அந்த இடத்தில் எத்தனையோ நாற்காலிகள் போடப்பட்டிருந்தாலும் பாகவதர் எழுந்து சென்றபிறகு அந்த இடம் இருள் சூழ்ந்தது போலாகியது என்று குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை அடைந்தபின் “ராஜமுக்தி” என்ற படத்தை சொந்தமாக பாகவதர் தயாரித்தார். அதில் எம்.ஜி.ஆர்., பானுமதி, வி.என்.ஜானகி, எம்.ஜி.சக்ரபாணி ஆகியோர் நடித்தனர். எந்தக் காரணத்தினாலோ என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம் நடிக்கவில்லை.

இந்தப்படம் சரிவர ஓடவில்லை. பிறகு “அமரகவி”, “புதுவாழ்வு”, “சிவகாமி” ஆகிய படங்களில் நடித்தார். “சிவகாமி” முடிவடையும் தருவாயில் 1959 நவம்பர் 1-ந்தேதி மாலை மரணம் அடைந்தார்.

அவர் உடல் சங்கிலியாண்டபுரத்தில் உள்ள அவர் தந்தையின் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.

- நாதன்

Next Story