முதல்-அமைச்சரின் நிவாரண நிதி அறிவிப்பு யானைப்பசிக்கு சோளப்பொரி திருநாவுக்கரசர் அறிக்கை


முதல்-அமைச்சரின் நிவாரண நிதி அறிவிப்பு யானைப்பசிக்கு சோளப்பொரி திருநாவுக்கரசர் அறிக்கை
x
தினத்தந்தி 11 Jan 2017 9:45 PM GMT (Updated: 11 Jan 2017 8:45 PM GMT)

முதல்-அமைச்சரின் நிவாரண அறிவிப்பு யானைப்பசிக்கு சோளப்பொரி போடுவதாகவே உள்ளது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நிவாரண நிதி


தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சியில் சிக்கியிருப்பதாக கூறி முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.

பன்னீர்செல்வம் அறிவித்துள்ள நிவாரண உதவிகளில் நிலவரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார். ஒரு ஏக்கர் புஞ்சைக்கு ரூ.5, நஞ்சைக்கு ரூ.12 என்று காலம் காலமாக குறைந்த நிலவரி இருக்கிற நிலையில் இந்த அறிவிப்பு சிறு, குறு விவசாயிகளுக்கு எந்த பலனையும் தரப்போவதில்லை. உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் கூட்டுறவு கடன்கள் அனைத்தையும் ரத்து செய்திருக்க வேண்டும்.

ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு இழப்பீடாக ரூபாய் 5,465 அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் சாகுபடி செலவு ரூபாய் 25 ஆயிரமாக இருக்கும் போது இந்த அறிவிப்பு என்ன பலனைத் தரும் என்று ஓ.பன்னீர்செல்வம் கருதுகிறார்? இதே இழப்புக்கு விவசாய காப்பீட்டு நிறுவனம் ரூ.21 ஆயிரத்து 500 தர வேண்டும் என்று கூறுகிற முதல்-அமைச்சர், தமிழக அரசு வழங்குகிற இழப்பீட்டை இவ்வளவு குறைத்தது ஏன்? கடந்த 2013-2014-ல் தற்போதுள்ள வறட்சியைவிட குறைவான பாதிப்பு ஏற்பட்ட போது அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வழங்கியதை கூட இன்றைய முதல்-அமைச்சர் வழங்க மறுப்பது ஏன்? இவரது நிவாரண அறிவிப்புகள் யானைப்பசிக்கு சோளப்பொரி போடுவதாகவே உள்ளது.

மத்திய அரசின் நிதி


விவசாயத்தின் அடிப்படை உண்மைகளை தெரியாதவராக தமிழக முதல்-அமைச்சர் இருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. கடந்த 2015-ம் ஆண்டில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது கேட்டது “ரூபாய் 25 ஆயிரத்து 912 கோடி”. ஆனால் மத்திய அரசு வழங்கியது “ரூபாய் 1,940 கோடி”. அதேபோல, வார்தா புயலில் இழப்பு ரூபாய் 10 ஆயிரம் கோடி எனக்கூறி முதல் தவணையாக ரூபாய் ஆயிரம் கோடி கேட்டு இதுவரை மத்திய பா.ஜ.க. அரசு சல்லிக்காசு கூட தரவில்லை.

இந்த நிலையில் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்ததோடு, மத்திய அரசின் தேசிய பேரிடர் நிதியிலிருந்து கணிசமான நிதியை பெறுவதற்கு தமிழக அரசு உரிமைக்குரல் எழுப்பி போராட வேண்டும். அப்போதுதான் மற்ற மாநிலங்களுக்கு கிடைப்பதைப் போல நிவாரண நிதியை தமிழக அரசு பெற முடியும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story