முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் வரும் வரையில் போராட்டம் இளைஞர்கள் திட்டவட்டம்


முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் வரும் வரையில் போராட்டம் இளைஞர்கள் திட்டவட்டம்
x
தினத்தந்தி 17 Jan 2017 9:22 AM GMT (Updated: 17 Jan 2017 9:22 AM GMT)

முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் வரும் வரையில் போராட்டம் நடைபெறும் என இளைஞர்கள் திட்டவட்டமாக கூறிஉள்ளனர்.


சென்னை,

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு அனுமதிக்கான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று நேற்று காலையில் இருந்து இன்று காலை வரையில் போராட்டம் நடத்தினர். அவர்களை இன்று காலை போலீஸ் வலுக்கட்டாயமாக கைது செய்தது. இதனையடுத்து இளைஞர்களை விடுவிக்க வேண்டும், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டும் என்று உள்ளூர் மக்கள் போராட்டத்தை தொடங்கினர். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

சென்னை மெரினாவிலும் இதே கோரிக்கைகளுடன் இளைஞர்கள் போராட்டத்தை தொடங்கினர். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் போராட்டம் இப்போது விரிவடைந்து உள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

காலையில் மெரினாவில் போராட்டத்தை தொடங்கிய இளைஞர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் உடன்பாடு எட்டப்படவில்லை. ஆங்காங்கே போராட்டங்கள் என்ற நிலையில் அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படும் சம்பவமும் நிகழ்ந்து வருகிறது. மாணவர்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர். 

இந்நிலையில் முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் வந்து பேச்சுவார்த்தை நடைபெறும் வரையில் போராட்டம் நடைபெறும் என மெரினாவில் போராட்டம் நடத்தும் இளைஞர்கள் திட்டவட்டமாக கூறிஉள்ளனர். 

Next Story