அலங்காநல்லூரில் தொடரும் போராட்டம் 21 ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் சீமான் அறிவிப்பு


அலங்காநல்லூரில் தொடரும் போராட்டம் 21 ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் சீமான் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Jan 2017 10:00 AM GMT (Updated: 17 Jan 2017 10:00 AM GMT)

அலங்காநல்லூரில் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


அலங்காநல்லூரில் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக  கைது செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பொதுமக்கள் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு அனுமதிக்கான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும்  ஊர்பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த 21 மணி நேரமாக ஜல்லக்கட்டு நடத்த அனுமதிகோரி அலங்காநல்லூரில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். விடிய, விடிய நடந்த போராட்டத்துக்கு பின்னர் போலீசார் 10 நிமிட அவகாசம் கொடுத்தனர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டதால் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.

இளைஞர்கள் கைது செய்யப்பட்ட தகவல் அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அவர்கள் அணி அணியாக திரண்டு அலங்காநல்லூர் வந்தனர். அங்குள்ள வாடிவாசல் அருகே பொதுமக்கள் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் திரண்டதால் மீண்டும் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  விஜயேந்திர பிதாரி நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், கைதான இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.  அவர்கள் மீதான   வழக்கை வாபஸ்  பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதில் அளித்த  போலீஸ் சூப்பிரண்டு, கைதானவர்கள் விடுவிக்கப் படுவார்கள் என்று தெரிவித்தார். ஆனால் அதனை பொதுமக்கள்  ஏற்க மறுத்து விட்டனர். இதனால் சுமார் 10 நிமிடம் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.தொடர்ந்து பொது மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால் அலங்காநல்லூரில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

அலங்காநல்லூரில் கைதானவர்களில் 224 பேர் வாடிப்பட்டி   நாடார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு இருந்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வாடிப்பட்டி பேரூர் தி.மு.க. முன்னாள் செயலாளர் பால்பாண்டியன் தலைமையில் ஏராள மானோர் அங்கு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

தொடர்ந்து திருமண மண்டப வாசலில், மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

மறியல் குறித்த தகவல் கிடைத்ததும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சரவணன், துணை கண்காணிப்பாளர்கள் மகேசுவரன், சங்கர் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். வருவாய் ஆய்வாளர் முத்துசங்கர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகளும் சென்று  சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் காரணமாக மறியல் கைவிடப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டம் மட்டும் நீடித்தது.

இதேபோல் வாடிப்பட்டி அருகே உள்ள தெத்தூரை அடுத்த கெங்கமுத்தூரிலும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. பாலமேடு சாலையில் நடைபெற்ற இந்த போராட்டம் குறித்து தகவல் கிடைத்ததும் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சமரசம் செய்தனர். இதனால் மறியல் கைவிடப்பட்டது.

இதேபோல் மதுரை ஆனையூர் பஸ் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.  போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர். இருப்பினும் பெண்கள் உள்ளிட்ட பலர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் எங்கும் போராட்டங்கள் வெடித்துள்ளன, இதற்கு பல்வேறு பிரபலங்களும் தங்கள் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் அமீர் அலங்காநல்லூர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சீமான் பேசுகையில், மக்கள் போராட்டத்தை ஒடுக்குவது சர்வாதிகாரம், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய நிலையிலிருந்து அரசு விலகி நிற்கிறது.

ஜல்லிக்கட்டு தடை என்பது எமது பண்பாட்டு மீது தொடுக்கப்பட்ட போர், 21ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும், எந்த இடத்தில் எப்படி நடக்கும் என்பது சஸ்பென்ஸ், காளைகள் சீறுவது மட்டும் உறுதி என தெரிவித்தார்.

Next Story