எல்லா காலத்திலும், எல்லா விஷயங்களிலும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்


எல்லா காலத்திலும், எல்லா விஷயங்களிலும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்
x
தினத்தந்தி 17 Jan 2017 10:50 AM GMT (Updated: 17 Jan 2017 11:00 AM GMT)

தமிழக மக்களை கடந்த காலங்களில் திமுக ஏமாற்றியிருக்கலாம். எல்லா காலத்திலும், எல்லா விஷயங்களிலும் தமிழக மக்கள் ஏமாற்ற முடியாது என்பதை ஸ்டாலின் உணர்ந்து கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை ஏற்படுத்திய பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இந்திய விலங்குகள் நல வாரியத்தை கலைத்து விட்டு தமிழகத்திற்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளித்து புதிய வாரியத்தை அமைக்க வேண்டுமென்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் இதை வலியுறுத்தியிருக்கிறார்.

ஆனால், அதை சொல்லும் தகுதி திமுகவுக்கு உண்டா? என்பது தான் எனது தாழ்மையான வினா.

ஜல்லிக்கட்டு சிக்கல் இப்போது தான் வந்தது என்று கூறி இந்த பிரச்சினையிலிருந்து ஸ்டாலின் விலகிவிட முடியாது. ஏனெனில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 2004-ஆம் ஆண்டிலிருந்தே பீட்டா அமைப்பும், இந்திய விலங்குகள் நலவாரியமும் வலியுறுத்தத் தொடங்கின. அதன்விளைவாகத் தான் 2008-ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

 2004-ஆம் ஆண்டில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை கையில் வைத்திருந்த திமுக, இப்போது கூறும் யோசனைகளை அப்போதே எடுத்திருந்தால் ஜல்லிக்கட்டு தடையின்றி நீடித்திருக்கும். தமிழக மக்களை கடந்த காலங்களில் திமுக ஏமாற்றியிருக்கலாம். எல்லா காலத்திலும், எல்லா விஷயங்களிலும் தமிழக மக்கள் ஏமாற்ற முடியாது என்பதை ஸ்டாலின் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பீட்டாவும், இந்திய விலங்குகள் நல வாரியமும் தமிழர்களுக்கு எதிரானவை என்பதில் ஐயமில்லை. ஆனால், ஆட்சியாளர்கள் நினைத்தால் அனைத்து தடைகளை உடைத்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியும். அந்தவகையில் காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து  காளையை நீக்கி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உடனடியாக நடக்க மத்திய அரசு வகை செய்ய வேண்டும்.

Next Story