தமிழ் திரை உலகம் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சசிகலா தொடங்கி வைத்தார்


தமிழ் திரை உலகம் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சசிகலா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 Jan 2017 9:45 PM GMT (Updated: 17 Jan 2017 7:06 PM GMT)

தமிழ் திரை உலகம் சார்பில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

சென்னை,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

தமிழ் திரை உலகம் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஒரு வருடம் கொண்டாடப்படுகிறது. இதன் தொடக்க விழா சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி தியேட்டரில் நேற்று மாலை நடந்தது.

இந்த விழாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விழாவில் கலந்துகொண்டார்.

நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட திரை உலக சங்கங்களை சேர்ந்த பிரமுகர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் விழாவில் கலந்துகொண்டனர்.

நாசர்–விஷால்

நடிகர் சங்க தலைவர் நாசர் விழாவில் பேசும்போது, ‘நடிகர் சங்கத்துக்கு முதல் செங்கலை எடுத்து வைத்து அதை ஒரு மாபெரும் இயக்கமாக உருவாக்கி தந்தவர் எம்.ஜி.ஆர். பாடல், நடிப்பு மூலம் மக்களை கவர்ந்தவர். அவரது நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட எங்களுக்கு பொறுப்பு இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தையும் ஈர்த்து வைத்திருந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை உணர்வு பூர்வமாக கொண்டாடுவோம்’ என்றார்.

நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பேசும்போது, ‘எம்.ஜி.ஆர். இருந்த சினிமாவில் நானும் ஒரு நடிகனாக இருப்பது பெருமை. மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்வதற்கு அவர் ஒரு முன்னோடியாக இருந்திருக்கிறார். விவசாயிகள் நலனை பேணி காக்க வேண்டும் என்று அரசுக்கு நான் கோரிக்கை வைக்கிறேன்’ என்றார்.

விஷால் பேசும்போது, சசிகலாவை பெயரை சொல்லி அழைத்தார். இதற்கு கூட்டத்தில் சிலர் ‘சின்னம்மா’ என்று அழைக்கும்படி குரல் எழுப்பியதால் லேசான சலசலப்பு ஏற்பட்டது.

பாரதிராஜா–தாணு

தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு பேசும்போது, ‘மக்கள் தலைவியாக சசிகலா இருக்கிறார். தூய அன்பும் அவரிடம் இருக்கிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை இந்த வருடம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவோம். சசிகலாவின் கரம் உயர திரை உலகம் தோள் கொடுக்கும்’ என்றார்.

டைரக்டர் பாரதிராஜா பேசும்போது, ‘ஒரு தமிழன் அல்லது தமிழச்சி முதல்–அமைச்சராக வரக் கூடாதா? என்று நான் அடிக்கடி பேசுவது உண்டு. சசிகலா தற்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆகி இருக்கிறார். அவரிடம் நட்பு பாராட்டும் குணம் இருக்கிறது. அவர் வளர்ச்சியை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. நான் இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தை பார்த்து எம்.ஜி.ஆர். பாராட்டியது இன்னும் நினைவில் இருக்கிறது. நேசமும், பாசமும் உள்ள மிகப்பெரிய தலைவர் எம்.ஜி.ஆர். அவரது நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். கலாசார பண்பாடு வி‌ஷயங்களில் இந்த அரசை யார் பயமுறுத்தினாலும் விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

கலந்துகொண்டவர்கள்

விழாவில் நடிகர் பிரபு, நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன், இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன், திரையுலக பிரமுகர்கள் பி.வாசு, டி.சிவா, ராதாகிருஷ்ணன், ஆர்.கே.செல்வமணி, ஜி.சிவா, கே.ஆர்.செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழா முடிந்ததும் எம்.ஜி.ஆர்.–ஜெயலலிதா நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் திரையிடப்பட்டது. இந்த படத்தை சசிகலா பார்த்தார்.


Next Story