பெங்களூரு லால்பாக்கில் குடியரசு தின மலர் கண்காட்சி மந்திரி எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன் நாளை தொடங்கி வைக்கிறார்


பெங்களூரு லால்பாக்கில் குடியரசு தின மலர் கண்காட்சி மந்திரி எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன் நாளை தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 18 Jan 2017 11:14 PM GMT (Updated: 18 Jan 2017 11:14 PM GMT)

பெங்களூரு லால்பாக்கில் குடியரசு தின மலர் கண்காட்சியை மந்திரி எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன் நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

பெங்களூரு,

பெங்களூரு லால்பாக்கில் குடியரசு தின மலர் கண்காட்சியை மந்திரி எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன் நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

கர்நாடக அரசின் தோட்டக்கலை கமி‌ஷனர் பிரபாஷ் சந்திரரே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

கோல்கும்பஸ் கோட்டை

குடியரசு தினத்தையொட்டி பெங்களூரு லால்பாக்கில் குடியரசு தின மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சி நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த கண்காட்சியை காலை 11 மணிக்கு தோட்டக்கலைத்துறை மந்திரி எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன் தொடங்கி வைக்கிறார். வருகிற 29–ந் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கவுள்ளது. இது 205–வது மலர் கண்காட்சி ஆகும்.

இந்த ஆண்டு தோட்டக்கலையின் பிதாமகனாக விளங்கும் மரிகவுடாவின் நூற்றாண்டு விழா ஆகும். இதையடுத்து கண்காட்சியில் பல்வேறு வகையான மலர்கள் இடம் பெற்றுள்ளன. கண்ணாடி மாளிகையில் பசுமையான புல்வெளி தரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியின் சிறப்பாக விஜயாப்புராவின் கோல்கும்பஸ் கோட்டை பூக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நுழைவு கட்டணம்

கண்காட்சி நடைபெறும் நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 21, 22, 26, 28 மற்றும் 29–ந் தேதிகளை தவிர மற்ற நாட்களில் பள்ளி குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. சாதாரண நாட்களில் பெரியவர்களுக்கு நுழைவு கட்டணம் ரூ.50 மற்றும் விடுமுறை நாட்களில் ரூ.60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் ரூ.20 ஆகும். கண்காட்சியை பார்க்க வரும் பார்வையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு 35 படுக்கைகள் கொண்ட முதல் நிலை சிகிச்சை மையம், ஆம்புலன்ஸ் சேவை, தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படும். லால்பாக்கில் நாய்கள் மற்றும் தேனீக்களின் தாக்குதலில் இருந்து தடுப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்பு கேமராக்கள்

மேலும் பூங்காவில் நுழைவு வாயில்கள், கண்ணாடி மாளிகை உள்பட முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் போலீசார் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இவ்வாறு பிரபாஷ் சந்திரரே கூறினார்.


Next Story