ஜல்லிக்கட்டுக்காக போராட்டத்தில் கர்ப்பிணி பெண் முதல் குழந்தை வரை உருக்கமான காட்சிகள் - வாசகங்கள்


ஜல்லிக்கட்டுக்காக   போராட்டத்தில்  கர்ப்பிணி பெண் முதல் குழந்தை வரை உருக்கமான காட்சிகள் - வாசகங்கள்
x
தினத்தந்தி 19 Jan 2017 6:15 AM GMT (Updated: 19 Jan 2017 6:15 AM GMT)

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.கர்ப்பிணி பெண்கள் , 6 மாத கைக்குழந்தை ஆகியோர் கலந்து கொண்ட காட்சிகள் இடம் பெற்றன.

சென்னை,

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக் கூடாது என்று பீட்டா எனும் அமைப்பு சுப்ரீம்கோர்ட்டு மூலம் தடை பெற்றுள்ளது.

இதனால் கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாத நிலை ஏற் பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் எந்த ஒரு உறுதியான நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. இதனால் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள் என்ற குமுறல் தமிழக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய & மாநில அரசுகள் உண்மையிலேயே ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்களை பரப்பி, பகிர்ந்து கொண்டு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்பட பல நகரங்களில் இளைஞர்கள் போராட்டத்தை நடத்தி வரு கிறார்கள்.
இதனால் தமிழ்நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக இளைஞர்களிடம் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் இளைஞர்களின் எழுச்சி மிகு அறவழிப் போராட்டம் உலக மக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. சென்னை மெரீனா கடற்கரையில் இன்று 3வது நாளாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பீட்டா அமைப்புக்குத் தடை விதிக்கக் கோரியும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி வழங்கக் கோரியும் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் ஆங்காங்கே அறவழிப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், டெல்லி மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாய், நேற்று 6 மாதக்கைக் குழந்தையுடன் ஒரு பெற்றோர் போராட்டக்களத்துக்கு வந்து, இளைஞர்களுடன் அமர்ந்து போராடினர்.



மேலும், கோவையில், நேற்று காலை திருமணம் முடித்த புதுமணத் தம்பதியினர், திருமண மண்டபத்தில் இருந்து நேராக போராட்டக்களத்துக்கு வந்து, காளை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைக் குழந்தை, புதுமணத் தம்பதி என்பதோடு இந்த அறவழிப் போராட்டம் நின்றுவிடவில்லை. அதற்கும் மேல், நிறைமாத கர்ப்பிணி ஒருவர், 'தமிழுக்காக தமிழ் கருவும் போராடும்' என்ற பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி சமூக தளத்தில் பரவியுள்ளது.



ஜல்லிக்கட்டு போராட் டத்துக்கு வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும், அங்கு பணியாற்றும் தமிழ் இளைஞர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். சிங்கப்பூரில் உள்ள அமிர்தராஜ்  என்ற இளைஞர்,  ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்  வகையில் ரூ.1 லட்சம் உதவி வழங்கி யுள்ளார்.

மேலும் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட அவர் இன்று சென்னை வந்து மெரீனாவில் நடந்த போராட் டத்தில் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, “இன்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடக்கும் இந்த நேரத்தில்  என்னால் சிங்கப்பூரில்  நிம்மதியாக இருக்க  முடியவில்லை. எனவே உடனடியாக கிளம்பி இங்கு வந்து விட்டேன். இந்த போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும்” என்றார்.



சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மாணவமாணவிகள், காளை முகம் வடிவில் அணிவகுத்து நின்ற காட்சி.

வேலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாணியம்பாடியில் மின்கம்பத்தில் இருந்து கீழே விழுந்த மாணவனுக்கு கால்முறிவு ஏற்பட்டது.



சுரேஷ் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சுரேஷ் என்ற மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டுக்காக மக்கள் இயக்கம் இப்படி ஒன்று திரண்டிருப்பது, தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நிச்சயம் மாறும் என்று நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story