ஆளுங்கட்சியின் தில்லுமுல்லுகளை மக்களிடம் எடுத்துரைப்போம்; மு.க.ஸ்டாலின் அறிக்கை


ஆளுங்கட்சியின் தில்லுமுல்லுகளை மக்களிடம் எடுத்துரைப்போம்; மு.க.ஸ்டாலின் அறிக்கை
x
தினத்தந்தி 19 Feb 2017 7:56 PM GMT (Updated: 19 Feb 2017 7:55 PM GMT)

ஆளுங்கட்சியின் தில்லுமுல்லுகளை மக்களிடம் எடுத்துரைப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டோம்

சட்டசபையில் தன்னிச்சையான வாக்கெடுப்பையும், எதேச்சதிகரமான வெற்றியையும் அறிவித்த சபாநாயகர் தனது சமூகத்தைக் குறிப்பிட்டு, அதை இழிவுபடுத்தும் நோக்கில் எதிர்க்கட்சியினர் செயல்பட்டதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி அனுதாபம் தேட முனைந்தார்.

அவர் உள்ளிட்ட அவையில் இருந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களின் சுதந்திரமான கருத்து வெளிப்படவேண்டும் என்பதால்தான் ரகசிய வாக்கெடுப்பை தி.மு.க.வும், கூட்டணி கட்சியினரும் வலியுறுத்தினார்களே தவிர, சமூக ரீதியில் இழிவுபடுத்தும் எண்ணம் சமூக நீதிக்காக சளைக்காமல் போராடும் தி.மு.க.வுக்கு ஒரு போதும் கிடையாது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி, பழங்குடியினருக்கு தனியாக 1 சதவீதம் தந்தது தி.மு.க. ஆட்சி தான். அருந்ததிய சமுதாய மக்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. அரசு தான் என்பதுடன், அந்த சமுதாயத்தைச் சேர்ந்த தகுதியானவர்களுக்கு கல்லூரி விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களை துணை முதல்–அமைச்சராக இருந்தபோது நானே வழங்கியிருக்கிறேன் என்பதையும் சபாநாயகருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

மனசாட்சியை தொட்டு சொல்லட்டும்

ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு எதிராக நடந்த வன்கொடுமைகளை, ஆணவப் படுகொலைகள் குறித்து பேரவையில் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதித்தாரா? ஆரோக்கியமான விவாதங்களுக்கு இடமளித்தாரா? இப்போது அவர் மனசாட்சியைத் தொட்டு சொல்லட்டும், தாழ்த்தப்பட்ட சமூகத்தை இழிவுபடுத்தி வந்தது யாரென்பதை.

மெரினா அறப்போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், நான் நேராகச் சென்ற இடம், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரான வக்கீல் கே.எஸ்.ரவிச்சந்திரனின் உடல் நலன் விசாரிக்கத்தான். சபை காவலர்கள் உடையில் வந்த காவல்துறையினரின் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி, மயக்கமடைந்து சிகிச்சை பெற்று வந்த அவரை சந்தித்து நலன் விசாரிக்க வந்தேன்.

தனித்தொகுதியான எழும்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அவர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவரைத்தான் சபாநாயகரின் உத்தரவுப்படி, வெளியேற்றம் என்ற பெயரில் தாக்கியிருக்கிறது காவல்துறை. இதுதான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் மீதான சபாநாயகரின் அக்கறையா?

கண்டனம்

பினாமி ஆட்சியைக் காப்பாற்ற முனைந்ததை திசை திருப்பும் வகையில் சபாநாயகர் பொய்யான குற்றச்சாட்டைக் கூறுகிறார். அதற்கு என்னுடைய வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்து, இந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் ஏற்புடையதல்ல என்பதை சட்டரீதியாகவும் மக்களிடமும் எடுத்துச் சொல்லி போராட்டங்களை மேற்கொள்ள தி.மு.க தயாராக இருக்கிறது என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

சட்டப்பேரவை விதிகளின்படி, ஒரு முறை நம்பிக்கை கோரும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, அதன் மீது வாக்கெடுப்பு நடத்தமுடியாமல் ஒத்திவைக்கப்பட்டால், மீண்டும் அதனை முன்மொழிய 6 மாதகால அவகாசம் வேண்டும். ஆனால், முதல்–அமைச்சர் 2 முறை முன்மொழிந்தார். இதுவே சட்டமீறலாகும். பேரவை விதிகளின்படி, இந்த தீர்மானம் செல்லாது. செல்லாத தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் ஏற்கத்தக்கதல்ல.

மக்களை நோக்கி பயணிப்போம்

இவற்றையெல்லாம் கவர்னரிடம் எடுத்துரைத்து இருப்பதுடன், நீதிமன்றங்கள் வாயிலாகவும் நீதி தேடும் பணியை தி.மு.க. மேற்கொண்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலானது, மக்கள் மன்றம். ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்களை நோக்கி நாம் பயணிப்போம். சட்டமன்றத்தின் கருப்பு நாள் அவலங்களை அராஜகங்களை–பினாமி ஆட்சியின் தில்லுமுல்லுகளை மக்களிடம் எடுத்துரைப்போம். அவர்களை ஒருங்கிணைப்போம்.

அவலக் கருப்பை அகற்றி விடியல் சிகப்பைக் கொண்டு வந்து தமிழகத்தை வெளிச்சமாக்க தொண்டர்கள் அணி திரள வேண்டும். அடுத்தடுத்த போராட்டங்களுக்கு ஆயத்தமாக வேண்டும். இந்த ஆட்சியை அகற்றி, மக்களாட்சியை நிலைப்பெற செய்யும்வரை நமது போராட்டம் ஓயப்போவதில்லை.  இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


Next Story