எம்.எல்.ஏ.க்கள் மீது தாக்குதல்: தமிழகம் முழுவதும் 22–ந்தேதி தி.மு.க. உண்ணாவிரதம்


எம்.எல்.ஏ.க்கள் மீது தாக்குதல்: தமிழகம் முழுவதும் 22–ந்தேதி தி.மு.க. உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 19 Feb 2017 8:04 PM GMT (Updated: 19 Feb 2017 8:03 PM GMT)

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. சிலர் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.

சென்னை,

சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 22–ந்தேதி உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் மீது தாக்குதல்

தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அமைச்சரவை மீதான நம்பிக்கை தீர்மானத்தை கொண்டுவந்தபோது, சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என கோரிய தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால் சட்டசபையில் கடும் அமளியோடு, நாற்காலிகளும் தூக்கி வீசப்பட்டன.

இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து புகார் மனு கொடுத்தனர். மேலும் நீதி கேட்கும் வகையில் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலோசனை கூட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தி.மு.க. தொண்டர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சாலை மறியல்களும், போராட்டங்களும் தொடர்ந்தது. பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவியதால் சட்டசபை நிகழ்வில் பங்கேற்ற வெளியூர்களை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பாமல் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியிலேயே தங்கியிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடந்தது.

தெருமுனை பிரசாரம்

கூட்டத்தில், சட்டசபையில் அவை மரபுகளுக்கு மாறாக போலீஸ் உயர் அதிகாரிகளை அழைத்து தி.மு.க. உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட ஜனநாயக படுகொலை சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் தெருமுனை பிரசாரங்களை செய்தும், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் பொதுமக்கள் கவனத்துக்கு எடுத்துச்செல்லவேண்டும்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களே இல்லாமல் நடைபெற்ற இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமா? என்பது குறித்தும், அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்? என்பது குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வழக்குகளை சந்திக்க தயார்

ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் வெளியே வந்த மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி: போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது வழக்குகள் போடப்பட்டிருக்கிறதே?

பதில்: இதுவரை பல வழக்குகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். அதனால் இந்த வழக்குகளை சந்திப்பதற்கு எந்த நேரத்திலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். சட்டசபையில் நேற்று முன்தினம் நடந்திருக்கக்கூடிய ஜனநாயக படுகொலைக்கு நாங்கள் என்ன வழக்கு போடுவது என்பது குறித்து சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். மிக விரைவில் இதை மக்களுக்கு உணர்த்தக்கூடிய வகையில் நிச்சயமாக வழக்கு தொடுக்க இருக்கிறோம்.

கேள்வி: மதுரையில் செய்தியாளர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்யும் கும்பலால் கத்தியால் குத்தப்பட்டுள்ளாரே, அதுகுறித்து உங்களுடைய கருத்து என்ன?

பதில்: ஏற்கனவே எங்களுடைய எம்.எல்.ஏ. சட்டசபையில் தாக்கப்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆக இந்த ஆட்சியில் இதெல்லாம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கெல்லாம் விரைவில் முடிவு கட்டுவதற்கு தி.மு.க. மட்டும் அல்ல தமிழக மக்களும் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.

ஜனாதிபதியை சந்தித்து...

கேள்வி: உண்ணாவிரத அறப்போராட்டம் சென்னையில் எங்கு நடைபெறும்?

பதில்: சென்னையில் மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் 22–ந்தேதி உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற உள்ளது. திருச்சியில் நடைபெறும் போராட்டத்தில் நானும் (மு.க.ஸ்டாலின்), காஞ்சீபுரத்தில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகனும் பங்கேற்க உள்ளோம்.

கேள்வி: சட்டசபையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக தேவை ஏற்பட்டால் ஜனாதிபதியை சந்திப்பேன் என்று கூறியிருந்தீர்கள். அந்த தேவை தற்போது ஏற்பட்டிருக்கிறதா?, கவர்னர் நீங்கள் கொடுத்த மனு மீது முடிவு எதுவும் எடுத்திருக்கிறாரா?

பதில்: தி.மு.க.வை சேர்ந்த எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் போலீசார் எப்படியெல்லாம் சட்டசபைக்கு உள்ளே வந்து அராஜகங்களில் ஈடுபட்டு, எங்களையெல்லாம் அடித்து தூக்கிக்கொண்டு வந்து வெளியே போட்ட காட்சிகளை எல்லாம் ஆதாரத்தோடு நாங்கள் கவர்னரிடம் கொடுத்திருக்கிறோம். எனவே இதுகுறித்து மேலும் டெல்லிக்கு சென்று ஜனாதிபதியையும் சந்திப்பதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். ஜனாதிபதியை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருக்கிறோம். நேரம் கொடுக்கப்பட்டபிறகு உறுதியாக அவரிடமும் சென்று புகார் கொடுக்க இருக்கிறோம்.  இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

உண்ணாவிரதம்

முன்னதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக சட்டசபையில் கடந்த 18–ந்தேதி ஆளும் அ.தி.மு.க.வினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானத்தை, அவை மரபுகளுக்கு மாறாக திட்டமிட்டு போலீஸ் உயர் அதிகாரிகளை வரவழைத்து, பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தி, கூண்டோடு வெளியேற்றினர்.

சட்டசபை விதிகளுக்கு புறம்பாக நிறைவேற்றிய ஜனநாயக படுகொலையைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் வருகிற 22–ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ‘‘உண்ணாவிரத அறப்போர்’’ நடைபெறும். தி.மு.க. சார்பு அணிகள் நிர்வாகிகள், மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஒத்த கருத்துடைய அமைப்புகளும்–பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்று, இந்த உண்ணாவிரத அறப்போரினை வெற்றிபெற செய்யவேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story