அ.தி.மு.க. வெற்றி பெற்ற 136 தொகுதிகளிலும் ஓ.பி.எஸ். பிரசாரம் செய்ய முடிவு பிரசார வாகனம் தயார்


அ.தி.மு.க. வெற்றி பெற்ற 136 தொகுதிகளிலும்  ஓ.பி.எஸ்.  பிரசாரம் செய்ய முடிவு பிரசார வாகனம் தயார்
x
தினத்தந்தி 20 Feb 2017 7:12 AM GMT (Updated: 20 Feb 2017 7:11 AM GMT)

ஓ.பன்னீர்செல்வம் தமிழ் நாடு முழுவதும் கிராமம், கிராமமாக சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். முதற் கட்டமாக அ.தி.மு.க. வெற்றி பெற்ற 136 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்

சென்னை

தமிழக சட்டமன்றத்தில் நேற்றுமுன்தினம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. அவருக்கு எதிராக களம் கண்ட முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் 11 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர், ரகசிய வாக்கெடுப்புதான் இருக்க வேண்டும் என சபாநாயகர் ப.தனபாலை வலியுறுத்தினார்கள். ஆனால், இறுதியில் வாக்கெடுப்பு வெளிப்படையாகவே அமைந்திருந்தது.

வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சசிகலா அணியை எதிர்த்து  தர்மயுத்தம் தொடங்கி இருப்பதாகவும் மக்களை சந்திக்கப் போவ தாகவும்  அறிவித்து இருந்தார். எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பலர் தொகுதி பக்கம்  செல்ல முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் நேற்று அவரது தொகுதியான ஆவடிக்கு சென்றார். அப்போது கட்சியினரும், பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித் தனர். துணிச்சலான அவரது முடிவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மக்களின் இந்த ஆதரவு ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக் கிறது.

ஓ.பன்னீர்செல்வம் தமிழ் நாடு முழுவதும் கிராமம், கிராமமாக சுற்றுப் பயணம் செய்து மக்களை  சந்திக்க திட்டமிட்டுள்ளார். முதற் கட்டமாக அ.தி.மு.க. வெற்றி பெற்ற 136 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பான ஆலோ சனை கூட்டம் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடந்ததுமூத்த நிர்வாகிகள் மதுசூதனன், பொன்னையன், கே.பி. முனுசாமி,  நத்தம் விசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஓ.பன்னீர் செல்வத்தின் தொண்டர்கள் சந்திப்பு இயக்கத்தை தொடங்குவது பற்றிய பயண திட்டங்கள் தயார் செய்யப்பட்டன.

கூட்டத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பில் அடைந்த தோல்வி குறித்து மக்களிடம் உண்மை நிலையை விளக்க வாக்காளர் பேரணி நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்த 122 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொகுதியில் பேரணி மேற்கொண்டு மக்களின் ஆதரவை பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்த வாக்காளர் பேரணியை என்று தொடங்குவது?, எங்கே தொடங்குவது? என்பது குறித்தும் பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
.
தற்போது அவர் பிரச்சாரம் செய்யவதற்காக பிரத்யேகமான வாகனம் ஓபிஎஸின் வீட்டில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.அதில் ஜெயலலிதா மற்றும்  இரட்டை இலை படங்கள்  பளிச்சென்று பொறிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப் பயணம் பற்றிய அறிவிப்பு இன்று அல்லது நாளைக்குள் வெளியாகும் என்று கட்சி  நிர்வாகிகள் தெரிவித்தனர் இதன் மூலம் ஓபிஎஸ் விரைவில் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்னும் ஓரிரு நாட்களில், ஓ.பன்னீர்செல்வத்தின் தமிழக சுற்றுப்பயண விவரம் வெளியாகும் என்றும் தெரிகிறது. இந்த நிலையில், நேற்று மாலை ஓ.பன்னீர்செல்வம் வீடு முன்பு அ.தி.மு.க.வில் உள்ள அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் குவிந்தனர்.

Next Story