ரகசிய வாக்கெடுப்பை நடத்தியிருந்தால் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று இருக்க முடியாது - மு.க. ஸ்டாலின்


ரகசிய வாக்கெடுப்பை நடத்தியிருந்தால் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று இருக்க முடியாது - மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 20 Feb 2017 3:17 PM GMT (Updated: 20 Feb 2017 3:16 PM GMT)

சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இருந்தால் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று இருக்கமுடியாது என முக ஸ்டாலின் கூறிஉள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் நேரிட்ட வன்முறை தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின்.. 

சட்டமன்ற உறுப்பினர்கள் பணம் வாங்கிஉள்ளனர், தங்கம் வழங்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. எங்களை செருப்பை கொண்டு அடித்தாலும் எதுவும் செய்யமாட்டோம் என ஒரு அமைச்சர் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது. நாங்கள் போராட்டம் நடத்தினோம், அப்போதைய தாக்குதலில்தான் காயம் அடைந்து உள்ளோம் என்றார். மேலும் போராட்டத்திற்கு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த மு.க.ஸ்டாலின் கொள்ளைகார கும்பலிடம் தமிழகம் சிக்கிஉள்ளது, அது பொதுமக்கள் மனதில் ஆழமாக பதிவாகி உள்ளது என்றார். 

தமிழக சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இருந்தால் முடிவு எப்படி இருந்து இருக்கும் என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதிலளிக்கையில்; தமிழக சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும், அல்லது ஒருவாரகால அவகாசம் வழங்கப்படவேண்டும் என கோரப்பட்டது. சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இருந்தால் வெற்றி கிடைத்து இருக்காது. எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று இருக்கமுடியாது என்றார். இச்சம்பவம் தொடர்பாக ஆளுநர், குடியரசு தலைவர் மற்றும் சட்டரீதியிலான நடவடிக்கை என தெரிவித்து உள்ளீர்கள் இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கு ஸ்டாலின் பதிலளிக்கையில், 

சட்டப்பேரவை சம்பவம் தொடர்பாக தமிழக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது, நாளை விசாரணைக்கு வருகிறது. சட்டப்பூர்வமான நடவடிக்கை தொடங்கிவிட்டது. 22-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. அதனையடுத்து சூழ்நிலையை பொறுத்து அடுத்தகட்ட போராட்டம் முன்னெடுக்கப்படும், என்றார். மக்களுக்கு பிடிக்காத ஒருவர் முதல்-அமைச்சர் ஆகமுடியும், அரசியலமைப்பில் அதற்கு இடமிருக்கிறதா என கேள்விக்கு மு.க. ஸ்டாலின் பதிலளிக்கையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு 4 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டு உள்ளது, ஜெயலலிதா இறந்துவிட்டார், அவரை விமர்சிக்க விரும்பவில்லை. 

இருந்தாலும் அவரும் இருந்து இருந்தால் சிறையில்தான் இருந்து இருக்கவேண்டும். அவர்களுடைய படத்தை வைத்துதான் அரசு கோப்புகளில் கையெழுத்து போடப்பட்டு உள்ளது, இதைவிட வெட்ககரமான செயல் என்ன இருக்க முடியும் என்றார். 
 
சபாநாயகர் தனபால் சமூகம் தொடர்பாக எழுப்பிய குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு மு.க. ஸ்டாலின் பதிலளிக்கையில், உள்நோக்கத்துடன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு எடுபடாது. அவர்கள் மீதான பொய்யை துடைக்க நடத்தப்பட்ட நாடகம். மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றார். புகார்கள் தொடர்பாக தமிழக ஆளுநர் நடவடிக்கையை எடுத்து வருகிறார் என்றும் ஸ்டாலின் கூறிஉள்ளார். 

Next Story